மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போல" (பட்டினப்: 124-39) பல நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பொருள்கள், காவிரிப் பூம்பட்டினக் கடை மறுகில் மண்டிக் கிடந்தன. "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்.155-63) நீர்வாணிகத்தின் பொருட்டு, பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு நாட்டுமக்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து கலந்தினிது வாழ்ந்தனர். "மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்" (பட்டினப்.216-8) "கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இரலங்கு நீர்வரைப்பும்" (சிலப்.5:9-12) யவனர் கிரேக்கர். பின்பு உரோமரும் யவனர் எனப்பட்டார். மேலை யாரியக் கலப்பெயர்கள் கலங்கள் முதன்முதல் தமிழகத்திலேயே செய்யப்பட்டன. அதனால், பல கடல்துறைச் சொற்களும் கலத்துறைச் சொற்களும் மேலையாரியத்திலும் கீழையாரியத்திலும் தமிழாயிருக்கின்றன. வாரி = நீர், பெரிய நீர் நிலையான கடல். L.mare, Skt. vari (வாரி) வாரணம்=கடல். L. marinus, E. marina, Skt. varuna (வாருண) வார்தல் = நீள்தல். வார் - வாரி, ஒ.நோ: நீள் - நீர். வார்- வாரணம் = பெரிய நீர் நிலை அல்லது வளைந்த நீர்நிலை. |