III சொற்றொடரியல் - Syntax 1. வாக்கிய அமைப்பு - Structure of Sentence i. சொன்முறை - Order of Words ஒரு வாக்கியத்தில் எழுவாய் முன்னும், பயனிலை பின்னும், செயப்படுபொருள் இடையு மிருத்தலே இயல்பான முறையாகும். உ-ம்: சம்பந்தர் சமணரை வென்றார். எழுவாயில்லாது ஒரு வாக்கியமும் எழுதுதல் கூடாது. தற்கூற்றில் ( Direct Speech ) மட்டும் தன்மை முன்னிலை எழுவாய்கள் தொக்கு நிற்கலாம். ii. முறைமாற்று - Hyperbaton or Inverted Order சில வாக்கியங்களில் வற்புறை ( emphasis ) நிமித்தம் வாக்கிய வுறுப்புகள் முறை மாறி வரும். உ-ம்: கண்டேன் சீதையை. அடித்தான் இராமன். iii. சொல்லிடையீடு - Inter - verbalspace சொற்கட்கிடையில் போதுமான இடம் விடல் வேண்டும். இல்லாவிடின், உரைஞன் அல்லது எழுத்தாளன் கருதிய தொடர்கள் வேறு தொடர்களாக மாறிவிடலாம். உ-ம்: அரிசி, வசம்பு - அரி, சிவசம்பு iv. முன்மைநிலை - Priority தழுவுகின்ற சொற்களும் சொற்றொடர்களும், தழுவப்படுகின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்தவேண்டும். உ-ம்: தம் தாய் தந்தையர் பெயர் ஆதி பகவன் என்பதைத் திருவள்ளுவர் தம் முதற் குறளாற் குறிப்பித்தார் என்பது, திருவள்ளுவர் தம் தாய் தந்தையர் பெயர் ஆதிபகவன் என்பதைத் தம் முதற் குறளாற் குறிப்பித்தார் என்றிருத்தல் நலம். அறிவும் தொழிலும்பற்றிய சிறப்புப் பெயர், இயற்பெயர்க்கு ( Proper Name ) முன்னும் பின்னும் வரலாம்; முன்வரின் இயல்பாம்; பின் வரின் இயற்பெயர் சிலவிடத்து விகாரமாம். |