உ-ம்: புலவன் வள்ளுவன், வள்ளுவப் புலவன் ஆசிரியர் பிரகாசம் சாமுவேல், பிரகாசம் சாமுவே லாசிரியர். v. அண்மைநிலை - Proximity தழுவுகின்ற சொற்களும், சொற்றொடர்களும், தழுவப்படுகின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்துவதுடன் இயன்றவரை அணித்தாயு மிருத்தல் வேண்டும். நீ வந்த காரணத்தை என்னிடம் சொல் என்பதை, நீ என்னிடம் வந்த காரணத்தைச் சொல் என்று மாற்றினாற் பொருள் மாறுதல் காண்க. எண்ணுப் பெயர்கள் பிற சொற்களோடு கூடிப் பெயரைத் தழுவும் போது, பிற சொற்கள் பிளவுபடாது ஒரு தொடரா யிசைப்பின் அவற்றுக்கு முன்னும், அவை பிளவுபட்டு இரு தொடரா யிசைப்பின் அவற்றுக் கிடையும், ஒரு தொடரேனும் நெடுந்தொடராய்ப் பெயரெச்சத்தில் முடியின் அதற்குப் பின்னும் நிற்கும். உ-ம்: ஒரு நல்ல தென்னாட்டுத் தமிழப் பையன் - முதல் செந்தமிழாக்கம் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு நல்லிசைப்புலவர். }- இடை தன் காலத்தை வீணாய்க் கழிக்கும் ஓர் இளைஞன் - கடை நல்ல ஒரு பையன் என்பது தவறு. தழுவப்படுவது அஃறிணைப் பெயராயின் நல்ல என்பது நல்லது என மாறி முன்னிற்கலாம். உ-ம்: நல்லதொரு காலம், நல்லதோர் காலம். vi. தெளிவு - Perspicuity திசைச்சொற்கள், அயற்சொற்கள் ( Foreign Words ), அருஞ்சொற்கள், பல்பொருட்சொற்கள், பொருண்மயக்கம், குன்றக்கூறல் முதலியனவில்லாமல், வாசிக்கக் கற்றோர்க்கெல்லாம் பொருள் விளங்குமாறு எளிய சொற்களால் வாக்கிய வுறுப்புகள் நிரம்ப எழுதுவது தெளிவாகும். உ-ம்: "மீன்கள் இடுகின்ற முட்டையெல்லாம் பொரிந்து சிறு மீன்களாகி வளருமாயின், நீண்டகன்ற பெருங்கடலும் அவற்றிற் கிடமளிக்கப் போதியதாகாது ..... இரண்டு மீன்களிலிருந்து பன்னூறாயிரம் மீன்கள் தோன்றும்..... இவற்றைத் தோற்றுவித்த பெரிய மீன்களே அதிவிரைவில் இவற்றைப் பிடித்துத் தின்றுவிடுகின்றன." (பா.வே. மாணிக்க நாயகர்) - திரு. க. ப. சந்தோஷம் அவர்கள் மொழிபெயர்ப்பு. மா வீழ்ந்தது என்று மயங்கக் கூறாது, மாமரம் வீழ்ந்தது, பரிமா வீழ்ந்தது என்று தெளியக் கூறுக. செம்பொன் பதின்பலம் என்பதைப் பொருட்கேற்ப, செம்பு ஒன்பதின்பலம் எனப் புணர்க்காதும், செம்பொன் பதின்பலம் எனப் பிரித்தும் எழுதுக. |