ஆள்வதென்பது, முத்தமிழ் நாடுகளுள் ஒன்றை
ஆள்வதுபோல் நேரடியாக இருந்திருக்க முடியாது. தமிழகத்துக் கப்பாற்பட்ட
வடவரசரிடமெல்லாம் திறைகொண்டு தன் அதிகாரத்தைச் செலுத்தியதாகவே இருந்திருக்க
முடியும். அதுவும் ஆட்சியின்பாற்பட்டதே. ஆதலால், 'இமயமலையை எல்லையாக வுடையவன்'
என்னும் பொருட்கு இழுக்கில்லை யென்க.
இனி, முடிநாகராயர் பாட்டில், ''ஐவர்'' என்பது
பஞ்ச பாண்டியரையும், ''ஈரைம் பதின்மர்'' என்பது அப் பஞ்ச பாண்டியரின் படைத் தலைவர்
நூற்றுவரையும், குறிக்குமென்று புத்துரை வரையும் கட்டுரைகாரர், தம் உரைக்குச்
சான்றாக,
'நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக்
குடகடற் குளிக்கும்' (புறம். 2)
என்னும் பகுதியைக் காட்டுகின்றார்.
குமரிக்கண்டம் கடலுள் முழுகிய பின், தமிழகத்தின் தென்கோடி குவிந்து முனையாக
முடிந்ததினாலும், அம் முனைவரை சேரனுக்கு ஆள்நில மிருந்ததினாலும், அவனாட்சிக் குட்பட்ட
கடலிலேயே கதிரவன் தோன்றி மறைவதாயிற்று. இவ் வியற்கையான நிலைமையினின்று, உதியஞ்
சேரலாதன் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டானென்றும், அதனால் பாண்டியர் ஐவரும்
அஞ்சிப் படையெடுத்தனர் என்றும், உய்த்துணர இடமில்லை. பாண்டியநாட்டுக் கப்பாலுள்ளதும்
அதினும் பெரியதுமான சோழநாட்டைக் கைப்பற்ற வல்லவன் முதலிற் பாண்டிய நாட்டையே
கைப்பற்றியிருப்பான். ஆதலால், பாண்டிய நாட்டைத் தாண்டிச் சென்று சோணாட்டைப்
பிடித்தான் என்னும் செய்தி, கொக்குப் பிடிக்கும் கலை (வித்தை)
போன்றதே.
இனி, பண்டைச் சேரர் கலப்படையும்
வைத்திருந்ததினால், சோணாட் டையோ பாண்டிநாட்டையோ கருதாது நேரே ஈழஞ்சென்று, அதன்
வடபகுதியைக் கைப்பற்றிச் சில்கால் ஆண்டிருக்கலாம். ''வெயிலத்துச் சென்றான்'',
''மழையத்துப் போனான்'' என்பன போன்ற அத்துச் சாரியை வழக்குகள், சோழ பாண்டிய
நாடுகளில் வழங்காமல், சேரநாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் இன்றும் வழங்குவது இதற்குச்
சான்றாயிருக்கலாம். சேரர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் சின்னாள் இருந்திருப் பினும்,
கதிரவன் சேரர் கடலிலேயே தோன்றி மறைந்த செய்தி அக்கால நிலைமைக்கு முற்றும்
ஏற்பதே. முடிநாகராயரின் முரஞ்சியூர் ஈழத்தைச் சேர்ந்ததென்னும் அறிஞர் கருத்தும், அப்
புலவரின் பெயருக்கும் ஞாயிற்றைப்பற்றிய அவர் கூற்றிற்கும் மிகப்
பொருந்துவதாகும்.
இனி, நால்வேதம் முடிநாகராயரின் பாட்டிற்
குறிக்கப் பெற்றிருப்ப தால், அதுபற்றியும் அவர் தொன்மையைப்பற்றிச் சிலர் ஐயுறுவர்.
பாரத காலத்திலேயே ஆரிய வேதம் வியாசரால் நான்காகப் பகுப்பட்டுவிட்ட தென்றும்,
அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும்,
புராணங் |