பக்கம் எண் :

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே 37

-37-

 

5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே

 

கூறும். முடிநாகராயர் பாட்டு பாரதப் போருக்குப் பிற்பட்டதென்பது வெளிப்படை. ஆதலால், நால்வேதத்தை அவர் குறிப்பிட்டது அவர் தொன்மையை மறுக்காது. வேதத்தை மறை என்னுஞ் சொல்லாற் குறிக்கவில்லையே யென்றும் சிலர் மயங்குவர். பாட்டிற் குறிக்கப்பட்டது ஆரியமறை. அதற்குரிய பெயர் வேதம் என்பதே. ஆதலால், ஆரிய மறையை ஆரியச் சொல்லாலேயே குறித்தது முறையானதே. கிறித்தவ மறையைப் பைபிள் அல்லது விவிலியம் என்றும், இசலாமிய மறையைக் குரான் என்றும், குறிக்காது வேறு எச் சொல்லாற் குறிக்கமுடியும்? தமிழிலுள்ள தமிழ்மறையே மறை என்னும் சொல்லால் யாண்டும் குறிக்கப்படற்குரியதாம்.

    'உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான'

    என்னும் தொல்காப்பிய நூற்பா (அகத். 31) இறந்துபட்ட தமிழ்மறையை உணர்த்தும்.

    தமிழுக்கு வேறெம்மொழிக்கும் இல்லா வகையில், அயலாராலும் தமராலும் வலிய எதிர்ப்புண்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ் இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டமையாலும், வரலாறும் மொழிநூலும் துணைகொண்டல்லது பெருந்தமிழ்ப் புலவரும் தமிழைச் செவ்வையாய் அறிய முடியாது. அவ் விரு நூலையும் துணை கொண் டறிந்த விடத்தும், தன்மானமும் நெஞ்சுரமும் இல்லாக்கால் உண்மையுணர முடியாது. பிறப்பொடு தொடர்புபடுத்தப்பட்ட ஆரியக் குலப்பிரிவினை யுளையில் நெடுங்காலம் முழுகிக் கிடந்தமையால், அடிமைத்தனம் ஊறிப் போன குடியிற் பிறந்த சிலர், ஆங்கில ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் கண்ட பின்னரும், தம் அடிமைத்தனத்தை விட்டு உய்வதில்லை. சில்லாண்டு கட்குமுன், ஒரு தமிழ்ப் புலவர், வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயர்கள், முறையே, ''வானவர் அன்பன்'', ''இமையவர் அன்பன்'' என்ப வற்றின் சிதைவென்றும் அவ் விரு பெயரும் ''பிராமணர் அடிமை'' என்று பொருள்படுமென்றும் எழுதியிருந்தார்.

    இனி, வறுமையினாலும் சிலர் அடிமைத்தனத்தை ஏற்பதுண்டு இதற்குத் தமிழைக் காக்கும் தமிழரசின்மையும் புலவரைப் போற்றும் வள்ளல்களின்மையுமே காரணம்.
எது எங்ஙனமிருப்பினும்,

    'பால்புளிப்பினும் பகல்இருளினும்
     கோல்சாயினும் குறள்தவறினும்'

    நடுக்கின்றி நிற்கும் என் மதிப்புக்குரிய நண்பர் மயிலை-சீனி. வேங்கட சாமியார், தாம் வரைந்ததை மீண்டும் ஆய்ந்து பார்ப்பாராக.