2 ''தமிழ்ப்பொழில்'' 36ஆம் துணர் 7ஆம் மலரில்
யான் எழுதியிருந்த கட்டுரையைக் கண்டு, வரலாற்றாராய்ச்சியாளரும் என் நண்பருமாகிய
புலவர் மயிலை சீனி. வேங்கடசாமியார் அவர்கள் அமைவார்கள் என்று கருதியிருந்தேன்.
ஆயின், அதற்கு மாறாக அதை மறுத்ததுடன் வேறுஞ் சில வழூஉக் கருத்துகளையும்
தோற்றியுள்ளார்கள். அவர்களது எதிர்மறுப்பு பொதுவகையான செய்திபற்றியதாயின், யான்
அமைந்திருப் பேன். ஆயின், தமிழுக்குப் பேரிழுக்கம் விளைப்பதாதலின், இவ்்விறுப்பை
விடுக்கத் துணிந்தேன். இதற்கும் மறுப்பு வரின், அதற்கும் இறுக்க அணியமாய் (தயாராய்)
இருக்கின்றேன்.
1. 'ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும்
இயன்மொழி வாழ்த்தில் ...... பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று' என்னும் என்
கூற்றில், ''சிறப்பித்து'' என்னும் சொற்பொருளை நண்பர் செவ்வையாய் உணர வில்லையென்று
தெரிகின்றது.
சிறப்பு என்பது, பொதுச்சிறப்பு,
தனிச்சிறப்பு என இருவகைப்படும். இவற்றுள், முன்னது பலர்க்குப் பொதுவானது; பின்னது
ஒருவரிருவர்க்கே சிறப்பானது. இரவலர் ஒரு பெரும்பொருள் வேண்டின், அதனை இல்லையென்னாது
ஈவது பொதுச்சிறப்பு. பெருந்தலைச் சாத்தனார்க்குக் குமணன் தன் தலையைக் கொடுக்கத்
துணிந்தது தனிச்சிறப்பு.
'பெருஞ்சமந் ததைந்த........ தழங்குகுரன்
முரசே' என்னும் பதிற்றுப் பத்துப் பகுதியுள், 'பெருஞ்சோறு உகுத்தற் கெறியும்' என்பது
தனிச்சிறப்பு மன்று, பொதுச்சிறப்புமன்று. 'முரசுமுழங்கு தானை மூவருள்ளும்' என்று
வெள்ளைக்குடி நாகனார் பாடுவதால் (புறம்.35), பல்யானைச் செல்கெழு குட்டுவன் உகுத்த
பெருஞ்சோறும், சேரன் செங்குட்டுவன் நிகழ்த்திய 'பெருஞ்சோற்று வஞ்சியும்' 'பிண்ட
மேய பெருஞ்சோற்று நிலை' என்னும் வஞ்சித்துறைக்கு எடுத்துக்காட்டான பொதுச்
செய்திகளே.
"பெருஞ்சோறு கொடுப்பது மூவேந்தருக்கும் பொதுவான தென்றா லும், அதுவும்
ஓர் அரசனுக்குரிய சிறப்பாகப் புலவர்களால் குறிப்பிடப் பட்டுள்ளன,' என்று நண்பர்
கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாதல் காண்க.
ஒருவரைப் பாடும் பாட்டில் பொதுச்செய்தியும்
கூறப்படும்; சிறப்புச் செய்தியும் கூறப்படும். சிறப்புச் செய்தியே
சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்திற்குரியதாம். ஒளவையார் முல்லானைப் பாடிய
பாட்டு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாம்.
'பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை' என்னும்
பொதுவான வஞ்சித் துறை பற்றியே உதியஞ் சேரலாதன், 'பெருஞ்சோற்று' என்னும் அடை
|