மொழி
பெற்றானாயின், அதனை நிகழ்த்திய பிறவேந்தருள், நண்பரால் சிறப்பாக
எடுத்துக்காட்டப் பெறும் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சேரன் செங்குட்டுவனும்
உதியஞ்சேரலும், ஏன் அவ் வடைமொழி பெறவில்லை? எல்லாருக்கும் பல்லிருக்க,
ஒருவனைமட்டும் ஏன் பல்லன் என்றழைக்க வேண்டும்? அதனால் அவன் பெரும்பல்லன் என்பது
பெறப்பட வில்லையா? அதுபோல், எல்லா வேந்தரும் போர்க்கு முன் பெருஞ்சோறு
வழங்கியிருக்கவும், அவருள் ஒருவன்மட்டும் ''பெருஞ் சோற்று'' என்னும் அடை ஏன்
பெற்றிருக்கவேண்டும்? அவனைப் பாடிய புலவரெல்லாரும் நடுநிலை திறம்பியவரா? இதனாலேயே
உதியஞ் சேரலாதன் வழங்கிய பெருஞ்சோறு, பிறவேந்தர் வழங்கிய பெருஞ் சோற்றினும்
வேறானதென்று தெரிகின்றதே!
2. பெருஞ்சோறு என்பது அரசன்
உடனிருந்துண்ணுவதால் பெருமை பெற்ற சோறு என்று நண்பர் கருதுகின்றார். அது உண்பாரின்
தொகைப் பெருமையால் ஆன அளவுப் பெருமையேயன்றி வேறன்று.
'சிறுசோற் றானு நனிபல
கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம்.
235)
என்னும் ஒளவையார் புறப்பாட்டடிகளையும் அவற்றின் உரையையும்
நோக்குக.
இன்றும் நாட்டுப்புறத்துக் காளியம்மை விழாப்
படைப்புகளில், ஊராரெல்லாம் உடனுண்ணும் பெருஞ்சோற்றமலையைக் காணலாம். ஒரு வேந்தனின்
நாற்பெரும் படைமறவரும் உடனுண்ணத்தக்க சோற்றுத் திரளை, எத்துணைப் பெரிதா
யிருந்திருத்தல் வேண்டும்!
பிண்டம் என்பது பிண்டிக்கப்பட்ட உருண்டை,
அது ஒரு சிறு கவளமன்று; ஓர் ஆடவனுக்குப் போதிய பேருருண்டை. சுவை மிக்கதும் சத்துள்ளதும்
மணங்கமழ்வதும் மறவுணர்ச்சிக்குப் பொருந்திய சரக்குகள் கலந்ததுமான சிறந்த
புலவுவுருண்டையே, அப் பிண்டமென்றறிதல் வேண்டும். ஆயினும், போரில்லாவிடின் புலந்து
கொள்ளும் தறுகண் மறவர், மறமிகுதியும் நன்றியறிவும்பற்றிப் பொருதனரேயன்றி, அரசனுடன்
அமர்ந்துண்ணும் உண்டியினால் மட்டும் பொரவில்லை. அரசன் அமைதிக் காலத்தில்
உயர்ந்தவனாயினும், போர்க்காலத்தில் தன் படைமறவரொடு கூடித் தானும் பொருததினாலும்,
போரால் ஏற்படக்கூடிய யாக்கை நிலையாமை தனக்குமுண்மை யறிந்திருப்பனாதலாலும்,
பிண்டமேய பெருஞ்சோற்று நிலையில் அவனுக்கு இரக்க வுணர்ச்சியினும் சமநிலைப் பட்ட
மறவுணர்ச்சியே விஞ்சியிருந் திருக்கும்.
3. 'ராயர், வானவரம்பன், இமயவரம்பன்
என்பன பற்றியும் தேவநேயர் தமது கருத்தைக் கூறியுள்ளார். அவையும் ஏற்கத் தகுந்தனவல்ல.
இதுபற்றித் தனியே வேறு கட்டுரை எழுதியிருக்கிறேன்,' என்றார் நண்பர். அக்
கட்டுரைவரின் அதையும்
மறுப்பேன். |