|
மொந்தை - மொத்தை = திரளை,
பருமன். மொத்தை - மோத்தை = பருத்த ஆட்டுக்கடா. |
9.
''போதியார், இளம்போதியார் என்பனவற்றுள் போதி என்பது புத்தமதச்
சொல்லல்லவா?'' ஆம்; புத்தமதத்தைச் சேர்ந்த வடசொல்தான். ஆயின், அது
புத்த மதம் தென்னாட்டில் வந்து பரவியதைக் குறிக்கின்றதேயன்றி, தமிழுக்கு
இன்றியமையாத சொல்லென்று எங்ஙனம் ஆகும்? அதற்குப் பகரமாக அறிவைக் குறித்தற்கு ஓதி
என்னும் சொல்லும், மரத்தைக் குறித்தற்கு அரசு என்னும் சொல்லும்
இருக்கின்றனவே!
10. ''உலோச்சனார் - சைன மதத்தில் லோச்சு
என்ற மயிர்கழிக்கும் நோன்பில் எழுந்த பெயரல்லவா? நமது நாட்டுப் பொருளை நீக்க
முடியாததுபோல இவற்றையும் தள்ளிவைக்க முடியாது.''
லோச்சு என்பது லுஞ்ச் (lunc) அல்லது லுச் (luc) என்னும் வடசொற்
றிரிவாகும். அதற்குப் பறித்தல் என்பதுதான் பொருள். லுஞ்சித கேச (luncitakesa) என்று சொன்னால்தான், தன் தலையினின்றும்
(உடம்பினின்றும்) மயிரை ஒவ்வொன்றாய்ப் பறித்துள்ள சமணத்துறவியைக்
குறிக்கும். உலோச்சனார் என்னும் சொல்லை, அக்காலத்திலேயே தமிழர் அல்லது
தமிழ்ப்புலவர் பறிதலையர் என்று அழகாக மொழிபெயர்த்திருக் கின்றனரே!
''பறிதலையராற் சாலப் பழுதா
மன்றே'' (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், 37:
7)
11. ''தமிழிற் புகுந்த
வடசொற்களை எண்ணி முடியாது; இரண்டா யிரத்துக்குமேல் இருக்கும். தொடர்களை இங்கே
கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.''
தமிழிற் புகுந்த வடசொற்கள்
என்று சொல்வதைவிட, தமிழ்நூல்களிற் புகுத்தப்பட்ட வடசொற்கள் என்று சொல்வதே
மிகப்பொருத்தமாகும். அவை ஈராயிரமாயிருந்தாலென்ன? இருபதினாயிரமாயிருந்தாலென்ன? அவை
தமிழுக்குத் தேவையல்லவே! அவற்றால் தமிழ்ச்சொற்கள் பொருளிழந்தும் வழக்கற்றும்
இறந்துபட்டும் போனதன்றி வேறு என்ன கண்டோம்?
மேலும், வடசொற்கள் என்று
பேராசிரியர் குறிக்கும் சொற்றொகுதி யுள், ஏறத்தாழ 1/5 பகுதி தமிழ்ச்சொல்லும்,
1/5 பகுதி தமிழ்த்திரிசொல்லும், 1/5 பகுதி தமிழ் வேர்கொண்ட சொல்லும், ஆகும்
என்பதை அவர் அறியார்
போலும்! |