12. 'வடமொழி இந்த
நாட்டிற்கு வருவதற்கு முன்னரும் ''முண்டா'' இனத்து மொழிகள் இந்தியாவில் வழங்கியிருத்தல்
வேண்டும். அம் மொழிகளைப் பேசுவாரோடு தொடர்புகொள்ள வந்தபொழுதெல்லாம் ஒரு சில
சொற்களேனும் அவர்களிடமிருந்து தமிழில் நுழையாதிருக்க முடியுமா? வழுதுணங்காய்,
தவளைக்காய், மீசை முதலியன அத்தகையன என்று கருதுகிறார்கள். இளநீர் என்று
சொல்லுகிறோமே, அந்தப் பெயரை எண்ணிப் பார்த்தோமா? இளந்தேங்காய் என்பதுதானே
அதன் பொருள்? அப்படியானால் ''நீர்'' என்பது தேங்காயையல்லவா குறிக்கவேண்டும். அப்படி,
தேங்காய் என்ற பொருளிலேயே ''நீர்'' என்ற சொல் ''முண்டா'' மொழியில்
வழங்குகிறது.'
இந்தியாவில் இன்று வழங்கும்
மொழிகள், தமிழம் (திரவிடம்), முண்டா, மான்குமேர், திபேத்த சீனம், ஆரியம்,
சேமியம் என்னும் அறு குடும்பங்களாகவும், வகைப்படுத்தப் பெறாத சிலவுமாக வகுக்கப்
பெற்றிருக்கின்றன. நக்கவார மொழி மலையப் பாலினீசியக் குடும்பத்தைச்
சேர்ந்ததாகும்.
இவற்றுள் முண்டா மொழிகள்
வேத காலத்திலேயே, அதாவது கி.மு.1500 ஆண்டுகட்கு முன்பே, வழங்கியிருக்கின்றன. இவை
சோட்டா நாகப்பூர் என்னும் சின்ன நாகபுரியிலும், அதையடுத்துள்ள வங்க, ஒட்டர,
சென்னை, நடுவண் (மத்திய) நாடுகளைச் சேர்ந்த மாவட்டங்களிலும், விதர்ப்ப (Berar) நாட்டுக்கு வடக்கிலுள்ள மகதேவ மலைத்தொடரிலும்
பேசப்படுகின்றன. இவற்றிற்கும், நக்கவாரத்திலும் சில கிழக்கிந்தியத் திட்டுகளிலும்
பேசப்படும் மான்குமேர்க் குடும்ப மொழிகட்கும் ஒரு பொதுக் கூறுண்டென்று, கிரையர்சன்
கூறுகின்றார். இவ்விரு குடும்பங்களும் முதலில் ஒன்றாயிருந்திருக்கலாம் என்பது அவரது
உய்த்துணர்வு.
முண்டா மொழிகளைப் பேசும்
மாந்தர் பெரும்பாலும் இந்தியாவின் கீழ்ப்பாகத்தை யடுத்திருப்பதாலும், மான்குமேர்
என்னும் கிழக்கத்து மொழிகளை அவர்களுடையவை ஒருபுடை ஒத்திருப்பதாலும், இடைக் கழக
விருக்கையை முழுக்கிய 2ஆம் கடல்கோளுக்குப்பின் அவர்கள் வந்து இந்தியாவிற்
குடியேறியிருக்கலா மென்றெண்ண இடமுண்டு.
'தீங்கனி நாவல் ஓங்குமித்
தீவிடை ... .... .... ... ... ... ... ... ... பூமி நடுக்குறூஉம் போழ்தத்
திந்நகர் நாகநன் னாட்டு நானூறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே
டெய்தும்' (9: 16 - 21)
என்னும் மணிமேகலைப் பகுதி அக் கடல்கோளைக்
குறித்ததாகலாம்.
முண்டா மொழிகள் எழுத்தும்
இலக்கியமுமற்றுப் பண்பாட்டில் தமிழினும் மிகத் தாழ்ந்திருப்பதனாலும், தலைக்கழகக்
காலத்திலேயே |