முழு வளர்ச்சியடைந்துவிட்டதனாலும், தமிழ்
முண்டாமொழியினின்று சில சொற்களைக் கடன் வாங்கும் நிலையிலிருந்த தென்பது,
வேண்டுமென்று தமிழைத் தாழ்த்திக் கூறுவதாகவே தோன்றுகின்றது. வணிகத்திற்கு முதலோ, ஒரு
பொருள் வாங்கப் பணமோ, இல்லாதவர், செல்வர் ஒருவரிடம் சென்று கடன் கொள்ளலாம்.
ஆயின், நப்பீல்டும் இராக்குப்பெல்லரும் பிருளாவும் போன்றார், எங்ஙனம் ஒருவரிடம்
கடன் கொள்ள நேரும்!
தவ்விச் செல்வது தவளை.
தவ்வுதல் தாவுதல், இனி தவழ்ந்து செல்லும் நீருயிரி தவளை
எனினுமாம்.
தவழ்தல் = தத்திச்
செல்லுதல், தத்துதல்.
''ஓதங் கரைதவழ்நீர்
வேலி யுலகினுள்'' (பு.வெ.8 : 9)
சிறுவர் நீர்மேல் தவளைபோல்
தத்தித் தத்திச் செல்லுமாறு எறியும் தட்டையான காய், தவளைக்காய் எனப்படும்.
காயில்லாத விடத்து ஓட்டாஞ் சல்லியை எறிவர். தோளில் அடித்தவிடத்துத் திரளும்
சதையையும் தவளைக்காய் என்பர். பழுக்காத புண்கட்டியைக் காய்
என்பதுண்டு.
இனி, நுணல் என்னும்
மணற்றவளையை மணற்காடை, மணற் காளான், மணற்கூகை என்னும் வழக்குண்மையால், அதை உண்ணும்
வகுப்பார் அதைத் தவளைக்காய் என்றும் அழைத்திருக்கலாம். தவளைக்காய் என்பது
தவக்களை, தவக்கை என்றும் திரியும்.
கி.பி.2ஆம் நூற்றாண்டினதான
குறுந்தொகைச் செய்யுளிலும், 9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பெறும் பெருங்கதையிலும்,
10ஆம் நூற் றாண்டினதான சீவகசிந்தாமணியிலும், 12ஆம் நூற்றாண்டிலிருந்த பேராசிரியர்
உரையிலும், 13ஆம் நூற்றாண்டினதான நன்னூலிலும், தவளை
குறிக்கப்பட்டுள்ளது.
''தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி''
(குறுந்.148)
''தவளைத் தண்டுறை கலங்கப்
போதி'' (பெருங்.மகத.3,21)
''தவளைக் கிண்கிணி ததும்புசீ
றடியர்'' (பெருங். உஞ்சைக். 46,246)
''தத்துநீர்த் தவளைக்குரற்
கிண்கிணி'' (சீவக.2481)
''தத்துவனவற்றுக்குங் குட்டிப் பெயர்
கொடுக்கப்படும்; தவளைக் குட்டி எனவரும்'' (தொல்.பொருள்.561,
பேரா.உரை)
''ஆற்றொழுக் கரிமா நோக்கந்
தவளைப் பாய்த்துப் பருந்தின்வீழ் வன்ன
சூத்திரநிலை'' (நன்.19)
தவளை நீருள்ளவிடமெல்லாம்
காணக்கூடிய உயிரியாதலாலும், அதன் பொதுவான இனத்திற்கு வேறு பெயரின்மையாலும், தவளை
என்னுஞ் சொல் தமிழ்நாடு முழுதும் வழங்கும் உலக வழக்குச் சொல்லாத லாலும், அது
தொன்றுதொட்டு வழங்கிவரும் தென்சொல்லேயெனத்
தெளிக. |