சமற்கிருதம். ஆயினும் அச் சமற்கிருதச் சொல்லினின்று தமிழ்ச்சொல் வந்ததாக,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சொற்களஞ்சியம் காட்டி யிருப்பது, ஆரிய ஏமாற்றுத்
தன்மையையும் தமிழர் ஏமாறுந் தன்மையையும் எத்துணை விளக்கமாகக் காட்டுகின்றதென்பதை
எண்ணிக் காண்க.
தக்கோலம்
என்பது வால்மிளகு, திப்பிலி, பாகடை (தாம்பூலம்), சிறுநாவல், பெருநாவல் என்னும்
ஐம்பொருள்களையே உணர்த்தும். ஆகையால், தக்கோலி என்பது உவமை அல்லது தன்மை
பற்றியதாகவு மிருக்கலாம். காரகில் என்பது வெள்ளகில் என்பதற்கு எதிராகையால் தன்மை
பற்றியதே. கிடாரவன் என்பது கிடாரத்தினின்று வந்ததாக
இருக்கலாம்.
இக்காலத்தில் அருமணவன், தக்கோலி என்னும் பொருளு மில்லை; சொல் வழக்குமில்லை. இவை
தாமாக ஒழிந்துபோயின. ஆயினும், ''இவற்றை எப்படி ஒழித்துத் தள்ளுவது?'' என்று நம்
தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் கவன்று பெரிதும் இடர்ப்படுகின்றார். ஒருகால்,
அப் பொருள்கள் அவர் இல்லத்தில் இடத்தையடைத்துக் கொண்டுள்ளன
போலும்!
14. ''நாம்
நம்முடைய பண்பாட்டை அங்கெல்லாம் பரப்பினோம் என்பதற்கு நிலையான சின்னங்களாக,
அங்கிருந்து வந்த சொற்கள் இன்றும் விளங்குகின்றன.''
நாம் நம் பண்பாட்டை அங்குப்
பரப்பியிருந்தால், நம் சொற்கள் அங்குச் சென்றிருக்குமேயொழிய, அங்கிருந்து
சொற்கள் இங்கு வந்திரா. வந்திருப்பின், நம் பண்பாடின்மையைக் காட்டுமேயன்றிப்
பண்பாட்டைக் காட்டா.
15. ''நாம் மிகமிக விரும்பிச் சுவைக்கும் முருங்கைக்காய்ச் சாம்பாரில்
விளங்கும் 'முருங்கை' சிங்களவர்கள் நமக்குக் கொடுத்த அன்பின்
காணிக்கை.''
முருங்கை தொன்றுதொட்டுத் தமிழரால்
உண்ணப்பட்டு அல்லது தின்னப்பட்டு வரும் தமிழ்நாட்டுக் காயே; ஆதலால், முருங்கைமரம்
தமிழ்நாட்டு மரமே.
முருங்குதல் (தன்வினை) =1
முறிதல். ''கூம்பு
முதன்முருங்க'' (மதுரைக்.
377) 2.
அழிதல். ''அமருளேற்றார்முரண்முருங்க''
(பு.வெ. 1 : 7) முருக்குதல் (பிறவினை) = 1. முறித்தல்.
|