பக்கம் எண் :

116வடமொழி வரலாறு

     கல் என்னும் செயற்கை முதனிலைக்குக் கணி (calculate) அல்லது
எண் (count or enumerate) என்று பொருளூட்டி, அதை மூலமாக
வடவர் காட்டுவது பொருந்தாமை காண்க.
    

"பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்"   
(தொல். 108)
   
"எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலை"     
(தொல். 83)
   
"காலந் தாமே மூன்றென மொழிப"
(தொல். 684)

     என்று இலக்கிய வழக்கிலும், வந்தக்கால், விடிகாலை, மழைக்காலம்
என்று உலக வழக்கிலும், மூலவடிவுச் சொல்லும் தொன்றுதொட்டுத் தமிழில்
வழங்கி வருதல் காண்க.

     தொல்காப்பியம் வழிநூலாதலின், அதிலுள்ள தென்சொற்க ளெல்லாம்
தலைக்கழக முதனூலைச் சேர்ந்தவை என அறிக.

     வந்தால் என்னும் நிலைப்பாட்டு அல்லது ஐயுறவு வினை யெச்சத்தை
வந்தக்கால் என்பது மேலைவடார்க்காட்டு வழக்கு. இது ஏனை வினைகட்கும்
ஒக்கும்.

     மா. வி. அகரமுதலி, கல் என்னும் வடமொழிச் செயற்கை மூலத்தோடு
calculate என்னும் ஆங்கிலச் சொல்லை ஒப்புநோக்கும். இவ் வாங்கிலச்
சொல் கல் என்னும் தமிழ்ப் பெயர்ச்சொல்லினின்று திரிந்ததாகும்.

     E "calculare...f. LL calculate (calcullus)"

     E "calculus...I, = small stone (-ULE) used in reckoning on
abacus" என்று ஆக்கசுப் போர்டு சிற்றகர முதலி கூறுதல் காண்க.

     cal = கல். culus = குழவு (இளையது, சிறியது).

     குட்டி என்னும் இளமைப் பெயர் சிறு பொருளையுங் குறித்தல் காண்க.

காலன் - கால

     காலன் = காலத்தை முடிவு செய்யும் அல்லது காலமுடிவில்
வருங் கூற்றுவன், "கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப" (புறம்.240:5).

காவிரி (காவேரி) - காவேரி

காவிரி - காவேரி.

     இவ் விருவடிவுள் எது முந்தியதேனும், இரண்டும் தமிழக ஆற்றுப்
பெயராதலானும் இருவகை வழக்கிலும் தொன்றுதொட்டு வழங்கி வருதலானும்,
தமிழ்ப் பெயராகவே யிருத்தல் வேண்டும்.