பக்கம் எண் :

148வடமொழி வரலாறு

சிச்சிலி - தித்திரி (வே.)

     சிச்சிலி = 1. மீன்கொத்தி (சீவக. 2199, உரை).

     2. கதுவாலி வகை.

     "அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும்" (திருமுறை கண்.17).

சித்து - சித் (c) - இ.வே.

     செத்தல் = 1. கருதுதல்.

     "அரவுநீ ருணல்செத்து" (கலித். 45). 2. அறிதல்.

     "துதிக்கா லன்னந் துணைசெத்து" (ஐங்.106).

     செ-செத்து=கருத்து, அறிவு. செத்து-சித்து = கருத்து, அறிவு.

     ஒ.நோ : செந்துரம் - சிந்துரம்.

     சித்து - சித்தன் = அறிவன், முக்கால அறிவுள்ள முனிவன்.

"மறுவில் செய்தி மூவகைக் காலமும்  
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்"


(தொல். 1021)

     சித்து - சித்தம் = கருத்து, மனம், அறிவு, ஓதி (ஞானம்).

     சித்தம் - சிதம் = மனம், அறிவு, ஓதி.

     வடவர் சி ('ci) என்றொரு செயற்கை மூலங்காட்டுவர். அது செ என்பதன்      திரிபே. சித் = கருது, அறி, காண், கவனி.

சித்தம் - சித்த (c)

     வடவர் சித்தன் என்னும் சொல்லை, ஸாத் (dh) என்பதன் திரிபான ஸித் (dh) என்பதனொடு தொடர்புபடுத்தி, ஸித்த (siddha) என்றும், சித்தியை ஸித்தி (siddhi) என்றும், காட்டுவர்.

     ஸித் = முடி, கைகூடு. ஸித்தி = முடிவு, முடிபு, கைகூடல், பேறு.
     ஸித்த =அரும்பேறு பெற்றவன்.

     சித்தன் ஆற்றலைத் தமிழிற் சித்து என்பதே மரபு. சித்து விளையாடல் என்பது உலக வழக்கு. கலம்பக வுறுப்பும் சித்து என்றே பெயர் பெற்றிருத்தல் காண்க.

சித்திரம் - சித்ர (c) - இ.வே.

     செத்தல் = ஒத்தல். செத்து = ஒத்து, போல (தொல். பொருள்.286, உரை).

     செ + திரம் = செத்திரம் - சித்திரம் = ஒப்பு, ஓவியம், பலவண்ணம்,      திறமை, புதுமை.