பக்கம் எண் :

26வடமொழி வரலாறு

     அவர் கூற்றுக் குன்றக் கூறல் அல்லது குறைப்பரவல் (அவ்வியாப்தி)
என்னுங் குற்றந் தங்குவதாகும்.

     ஆரியமொழிகட்குள் வேத ஆரியமும் அதன் கொடுமுடி அல்லது
விரிவளர்ச்சியான சமற்கிருதமுமே பிறங்கித் தோன்று வதாலும், அவற்றை
அடிப்படையாக வைத்தே ஆரியமொழிக் கூட்டுக் குடும்பங்களை யமைத்து
மேனாட்டார் ஆய்ந்து வருவ தாலும், அவற்றை நீக்கிய ஆரியநிலை, அவர்
கருத்துப்படி குறைத்தலை யுடம்பே யென்று கூறி விடுக்க.

     இந்தியாவிற்குள் எங்ஙனம் பிராமணர்க்குத் தனி நாடில்லையோ
அங்ஙனமே விரிநீர் வியனுலகிலும் ஆரியத்திற்குப் பிறந்தகமாகக் கூறும்
தனியிடமில்லையென்று, தெற்றெனத் தெரிந்துகொள்க.

6. வடமொழியின் ஐந்நிலை

     வடமொழி ஒரு திரிமொழியும் கலவை மொழியுமாதலின், அது
பின்வருமாறு ஐவேறு நிலை கொண்டதாகும்.

(1) தென்திரவிடம் (வடுகு)

     முதன்முதல் வடதிசையாற் பெயர் பெற்ற மொழி வடுகு என்னும்
தெலுங்கே. அது வேதக் காலத்திலேயே தமிழினின்று திரிந்திருந்தது.

     வடம் - வடகு - வடுகு - வடுகம்.

     வடகு என்னும் சொல்லிடையுள்ள டகரம், அதையடுத்து ஈற்றிலுள்ள
குகரச்  சார்பால் டுகரமாயிற்று. இங்ஙனம் அகரம் உகரமாய்த் திரிந்தது
உயிரிசைவு மாற்றம் (Harmonic Sequence of Vowels) என்னும்
நெறிமுறையாகும்.

     ஒ.நோ: கேடகம் - கிடுகு

     தமிழையடுத்து வடக்கிலுள்ள வடுகு, பல்வேறு வகையில் வலித்தும்
திரிந்தும் விரிந்தும் ஆரிய அமைப்பிற்கு அடிகோலு கின்றது.

     (1) எடுப்பொலி
     எ-டு : குடி- gudi (கோவில்), கூன் - gunu. சடை - ஜட.

     (2) வலிப்பொலி
     எ-டு : செய் - cey, போடு - பெட்டு.