பக்கம் எண் :

முன்னுரை35

     உருத்தல் = சினத்தல். உருத்திரம் = சினம். உருத்திரம் -
உருத்திரன் = சினந்த கடுங்காற்றுத் தெய்வம். உருத்திரன் - ருத்ர
(இ.வே.).

     ருத்ர (rudra) என்னுஞ் சொற்கு ஊளையிடுபவன் (howler) அல்லது
உரறி (roarer) என்று பொருள் கூறுவர் மாக்கசு முல்லர்.

     ருத்(rud) = அழு, ஊளையிடு, உரறு.

     இனி, ருத்ர என்னும் வடசொல்லைச் சிவன் என்னும் தென்
சொல்லின் மொழிபெயர்ப்பாகவும் கொள்வர். இது வேதக் காலத்திற்
கொவ்வாது.

      ருத் (rud - rudh) = சிவப்பாயிரு. ருதிர (rudhira)=சிவப்பு, செந்நீர்
(அரத்தம்), செவ்வாய், செம்மணி (மாணிக்கம்).

     இப் பொருளில் ருதிர என்னுஞ் சொல் அரத்தம் என்னும்
தென்சொல்லின் திரிபாகும்.

(9) சில தெய்வங்களைப்பற்றி ஓரளவு முரண்பட்ட செய்திகள்
வெவ்வேறிடத்திற் கூறப்பட்டுள்ளன.
   
(10) சோமக்கள்ளைத் தெய்வமாக வணங்கி வந்ததும். அதற்கு
114 இருக்குவேதப் பாட்டுகள் பாடப்பட்டிருப்பதும், வேத
ஆரியரின் பிள்ளை மனநிலையைக் காட்டப் போதியன
வாம்.
   
(11) முருகன், சிவன், திருமால், காளி என்பவர் வேதங்களிற்
சொல்லப்படவுமில்லை; அவர் ஆரியத் தெய்வங்களு
மல்லர். அவர் தூய தமிழ்த் தெய்வங்களே என்பது, என்
'தமிழர் மதம்' என்னும் நூலில் விளக்கப்பெறும்.
   
(12) வேத ஆரியர் தமிழரொடு தொடர்புகொண்டபின், சில
வேதத் தெய்வங்களைத் தமிழ்த் தெய்வங்களோடு
இணைத் திருக்கின்றனர்.

  எ-டு :  
  வேதத் தெய்வம் தமிழ்த்தெய்வம்
     
  உருத்திரன் சிவன்
     
  விஷ்ணு(சூரியன்) திருமால்

வேதமொழி

(1) வேதமொழி மேலையாரியத்திற் கினமானது. இது பின்னர்க் காட்டப்பெறும்.
 
(2) வேதமொழி மேலையாரியத்தின் திரிபானது.