பக்கம் எண் :

42வடமொழி வரலாறு

     யாகக் கொண்ட உயரிய மெய்ப்பொருள் நூலுக்கும் இடைப்பட்ட
வேறுபாடு, மடுவிற்கும் மலைக்கும் இடைப்பட்ட தாகும்.

     வேத சாகைகட்கு ஏற்பட்ட பிராதிசாக்கியம் என்னும்
ஒலியிலக்கணங்களும், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றிய கிரந்தாட்சரம்
என்னும் வண்ணமாலையும் வரிவடிவும் வேதமொழி யொடு
ஆயிரக்கணக்கான தென்சொற்களைச் சேர்த்தமைத்த சமற்கிருதம்
என்னும் அரைச் செயற்கையான நடைமொழியும், தமிழிலக்கணத்தைப்
பின்பற்றிச் சமற்கிருத எழுத்திற்கும் சொல்லிற்கும் வகுத்த ஐந்திரம்
என்னும் வியாகரணமும், வேத ஆரியரான பிராமணர் தமிழரொடு
தொடர்புகொண்டபின் இயன்றவையே.

     பல்வேறு துறைப்பட்ட பல்வேறு வடநூலாசிரியரும் காவியப்
புலவரும் தொன்றுதொட்டுத் தென்னாட்டினராக இருந்து வந்திருக்கின்றனர்.
பாணினீயத்திற்கு வார்த்திகம் என்னும் பொழிப்புரை வரைந்த
காத்தியாயனரும், மாபாடியம் என்னும் விரிவுரை வரைந்த பதஞ்சலியும்
காவியதரிசம் என்னும் அணியிலக்கணம் இயற்றிய தண்டியும் வேதங்கட்கு
விளக்கவுரை செய்த சாயனரும், தென்னாட்டாரே.

"பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில
மொருபக லெழுவ ரெய்தி யற்றே
வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக்
கையவி யனைத்து மாற்றா தாகலிற்
கைவிட் டனரே காதல ரதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே"
          (புறம்.358)

     என்னும் புறநானூற்றுப் பாட்டு வான்மீகியார் என்னும் புலவரால்
இயற்றப் பெற்றதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. இப் பாட்டுத் துறவறத்தின்
உயர்வைக் கூறுவதையும் வடமொழி வான்மீகி துறவியாயிருந்ததையும்,
இராமாயணக் கதை நிகழ்ச்சியின் பெரும்பகுதி தென்னாட்டில்
நிகழ்ந்ததையும், வடமொழி வான்மீகியின் தென்னாட்டு
இயற்கையமைப்பறிவையும், தருமபுத்திரனைக் கோதமனார் பாடிய
பாட்டொன்று (366) புறநானூற்றில் உண்மையையும், பாரதப்போரில்
முத்தமிழ் வேந்தரும் கலந்துகொண்டதையும், பாரதக் காலத்திற்கு ஓரிரு