பக்கம் எண் :

64வடமொழி வரலாறு

     இங்ஙனம் பெற்றோர் பெயர்கள் பல்வேறு உணர்ச்சிக் குறிப்பிடைச்
சொல்லாவது, தமிழிற் பெரும்பான்மையென அறிக. அக்கை என்னுஞ்
சொல் தாயையும் மூத்த உடன்பிறந்தாளையும் குறிக்கும்.

அங்கணம் - அங்கண

     வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. அங்குதல் = வளைதல்,
சாய்தல். அங்கு - அங்கணம் = வாட்டஞ்சாட்ட மாயிருக்கும் சாலகம்.

     சாலகம், சாய்கடை (சாக்கடை) என்னும் பெயர்களும் இக் கரணியம்
பற்றியவையே. வாட்டா யில்லாவிட்டால் நீர் செல்லாது தேங்கி நிற்கும்.

"அங்கணத்து ளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முற் கோட்டி கொளல்"
(குறள்.720)

என்னும் குறளில் உள்ள அங்கணம் என்னும் சொற்கு, பரிமேலழகர்
முற்றம் என்று பொருளுரைத்திருப்பது பொருந்துவதன்று. கீழோர்க்கு
உரைக்கும் மாணுரை வீண்படுவதற்குச் சாலகத்திற் கொட்டிய பாலே
தக்க உவமையாம்.

     அங்கு (ang) என்னும் முதனிலைக்குச் 'செல்' (to go) என்று
பொருள் கூறி, உலாவுமிடம் அங்கணம் என்று கொள்ளும் வடவர்
சொல்லியல் உத்திக்குப் பொருந்துவதன்று.

அங்கதம் - அங்கத

     அங்கு = வளை. அங்கதம் = வளையல், தோள் வளைவி.

     பொதுவாக உறுப்பைக் குறிக்கும் அங்கம் என்னும்
வடசொல்லினின்று அங்கதம் என்னும் சொற் பிறந்ததாக வடவர் கூறுவர்.

அச்ச - அக்ஷ (axle)

     அட்டு - அட்டம் = குறுக்கு. அட்டு - அச்சு = குறுக்காக இருப்பது,
உருள்கோத்த மரம்.

அசை - அச்     

"நஞ்சினை யசைவு செய்தவன்"
(தேவா.581 : 3)

     அசைத்தல் = உண்ணுதல். அசைவு செய்தல்= உண்ணுதல்.

     அசை என்னும் முதனிலை வழக்கிறந்தது.