பக்கம் எண் :

70வடமொழி வரலாறு

     இவற்றால், அந்தி என்பதன் முன்மிகை வடிவான சந்தி என்பது
தென்சொல்லே யென்பது தெளிவாம்.

     சந்திப்பைக் குறிக்கும் junction அல்லது juncture என்னும்
ஆங்கிலச் சொல்லின் முதனிலையான join என்பதும், jungere என்னும்
இலத்தீன் சொல்லின் திரிபாம். அவ் விலத்தீன் சொல் jugare என்பதன்
திரிபாம். L.jugare = E. join,L.jugam = E.yoke ஆகவே, சந்திப்பைக்
குறிக்கும் இலத்தீன் சொல்லும், சமற்கிருதச் சொல்லினின்று வேறுபட்ட
தனிச்சொல் என்பதை அறிக.

     சந்தி என்னும் வடிவமும் ஓசையும் ஆராய்ச்சியில்லாத் தமிழ்ப்
புலவரை மயக்கலாம். இதற்கொத்த வடிவும் பொருளுமுள்ள சொற்கள்,
ஏனைச் சொன்முதல் மெய்களைக் கொண்டும் தமிழில் அமைந்திருத்தல்
காண்க.

கும்-(குந்து) - குத்து - கொத்து = குலை, குடும்பம், திரள்.
கும்-கம்-கந்து=உடற்சந்து (திவா.), மாடு பிணைக்குந் தும்பு.
கந்துவான் = மாடுபிணைக்குங் கயிறு.
கந்துகளம் = நெல்லும் பதருங் கலந்த களம்.
கந்துமங்கல் = கப்பும் மங்கலுங் கலந்த சாயம்.
கந்து மாறுதல் = நுகத்திற் பூட்டிய எருதுகளை வலமிடம் மாற்றிக்
கட்டுதல்.
சந்தி என்பது அந்தி என்பதன் முன்மிகை.
சும் - சும்மை = தொகுதி. சும் - சொம் = திரண்ட செல்வம்.
சொம் - (சொந்து) - சொத்து.
சொந்து - சொந்தம் = தொடர்பு, உடைமை.
தும் - துந்து - தொந்து - தொந்தம் = தொடர்பு, தொடுப்பு.
தொந்து - தொத்து = வி. ஒட்டு; பெ. கொத்து.
நும் - நம் - நந்து. நந்துதல் = வளர்தல்.
பும் - பொம். பொம்முதல் = மிகுதல்.

     "அதிர்குரல் பொம்ம" (பாரத. பதினான். 112)

     பொம் - பொம்மல் = கூட்டம்.

     "பொலிந்தன உடுவின் பொம்மல்" (கந்தபு.காசிபன் புல. 28)

     பொம் - பொந்து = திரட்சி. பொந்து - பொந்தன்.

     மும் - (மொம்) - மொந்து = திரட்சி, பருமை. மொந்து - மொந்தன்.

     சந்தி என்னும் சொல், சொற்புணர்ச்சி என்னும் பொருளில் எவ்வகைத்
தமிழ் வழக்கிலும் இதுகாறும் இடம்பெறாமற் போயினும் தெருப்புணர்ச்சி
என்னும் பொருளில் சந்திக்கிழுத்தல்,