பக்கம் எண் :

84வடமொழி வரலாறு

ஆலாத்தி - ஆரத்தி (ஆ + ரத்தி)

     ஆலுதல் = ஆடுதல், சுற்றுதல். ஆல் - ஆலா - ஆலாத்து.

     ஒ.நோ : உல் - உலா - உலாத்து.

     ஆலாத்து - ஆலாத்தி = சுற்றியெடுப்பது.

     "ஆலாத்தி சுழற்ற லென்கோ" (சௌந்தரி. 103)

     ஆலாத்தி -ஆலத்தி -ஆரத்தி.

     ஆ- ரத்தி என்னும் வடசொற்கு நீக்குதல், அமைதிப்படுத்தல்
(ceased,quiet) என்னும் பொருள்களே மா.வி. அகரமுதலியிற் குறிக்கப்
பட்டுள்ளன.

ஆவணம்1 - ஆபண

     ஆவணம் = அங்காடித் தெரு.     

"மல்லல் ஆவணம் மாலை யயர"
(நெடுநல். 44)

     காவணம் = சோலை, சோலைபோன்ற பந்தல், கொட்டகை.

     காவணம் - ஆவணம் = கடைத்தெரு (பிங்.), தெரு (திவா.).

"அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்"
(சிலப். 14 : 213)

     ஆலமரத்தடியிலும் தோப்பிலும் சந்தை கூடுவதும் அங்காடி
வைப்பதும் பண்டை வழக்கம். அது இன்றும் சிலவிடத்துள்ளது.
வடமொழியில் மூலம் இல்லை.

ஆவணம்2 - ஆபண    

     ஆவண்ணம் - ஆவணம் = ஆகும் எழுத்து.

     ஆ(ஆகு)தல் = உதவுதல், ஊழியஞ் செய்தல். வண்ணம் = எழுத்து.
     
     ஆவணம் = 1. ஊழிய ஒப்பந்தம், அடிமையோலை, ஊழியம்,      அடிமைத்தனம்.
          

"இராவணன் றிண்டோ ளிருபது நெரிதர
வூன்றி ஆவணங் கொண்ட... அண்ணல்"
(தேவா.869 : 8)

     2. உரிமை (பிங்.). 3. உரிமையோலை.   
     

"ஓராவ ணத்தால்...எனையாளுங் கொண்ட
நம்பிரானார்"
(தேவா. 977 : 5)

     ஆவணக்களம் (களரி) = ஆவணப் பதிவுச் சாலை.
     
     ஆவணவோலை = உரிமை முறி