பக்கம் எண் :

142வடமொழி வரலாறு

"நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி," (43)
"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே," (64)
"ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே," (301)
"அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு," (31)
"ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ." (32)
"எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி" (552)

     என்று தொல்காப்பியம் கூறுவதாலும், சுட்டும் வினாவும் இன்றும்
தனி நெடிலாகத் திரவிடத்திலும் வடதிரவிடக் கான்முளையாகிய
இந்தியிலும் வழங்குவதாலும், குறில் நெடில் பலுக்க வெளிதா
யிருப்பதனாலும், ஆண்டு ஈண்டு யாண்டு (ஏண்டு) என்னுஞ் சொற்கட்கு
முதல் குறுகிய வடிவின்மையாலும். சுட்டு வினாவெழுத்துகள்
முதற்காலத்தில் நீண்டேயிருந்து பின்னர்க் குறுகியமை அறியப்படும்.

     சுட்டடிகளும் வினாவடிகளும் தனியெழுத்துகளாயிருப்பத னால்,
அவற்றை இடைச்சொல்லென்று கொண்டனர் முன்னோர். அவை
தனியெழுத்துகளாயினும் பொருளுணர்த்துவதாற் சொல் லாயும்
பலவெழுத்துச் சொற்போன்றே பொருள் நிரம்பியும் இருப்பதை அறிக.

     ஆவூர், அவ்வூர். அந்தவூர் என்னும் மூன்றும் ஒன்றே. அ =
அந்த (that). That என்னும் ஆங்கிலச் சொற்போன்றே, அ, அந்த
என்பனவும் சுட்டுப் பெயரெச்சம் (Demonstrative Adjective) என அறிக.
பெயரைத் தழுவுவதெல்லாம் பெயரெச்சமே. அது தெரிநிலை வினையாகவு
மிருக்கலாம்; குறிப்பு வினையாகவு மிருக்கலாம்; பிறவாறும் இருக்கலாம்.

     இயல்பான சுட்டுகள் சேய்மை, அண்மை, முன்மை என மூன்றே.
ஆகவே, அவற்றைக் குறிக்கும் ஒலிகள் அல்லது எழுத்து களும். ஆ
(அ), ஈ இ), ஊ(உ) என்னும் மூன்றே.

     இவை குமரிக்கண்டத்தில் தமிழ்த் தோற்றக் காலத்தில் கைச்
சுட்டுகளுக்குப் பகரமாக (பதிலாக) வாய்ச்சுட்டுகளாகத் தோன்றிய ஒலிகள்.
இம் மூவொலிகளன்றி வேறெவ்வொலிகளும் அம் மூவிடத் தையும்
சுட்டாமையை ஒலித்துக் காண்க.

     முச்சுட்டும் முதன்முதல் தமிழில் தோன்றியதனாலேயே, அவை
தமிழிலும் அதன் வழிப்பட்ட திரவிடத்திலும் இன்றும் தனியெழுத்து
வடிவிலிருப்பதுடன், மூவிடத்தையும் ஒழுங்காகச் சுட்டவும் செய்கின்றன.
இஃதொன்றே தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்னும் உண்மையைக்
காட்டவும் நாட்டவும் போதிய சான்றாம்.