பக்கம் எண் :

தமிழ்மறைப்பதிகாரம்165

காரன்-காரி யீறுகள்

     காரன், காரி என்பன தமிழில் உடைமை அல்லது உரிமைபற்றிய
ஆண்பால் பெண்பால் ஈறுகள்.

     கடுமை = மிகுதி, வலிமை. கடு-கடி-கரி-காரம் = கடுமை, மிகுதி,

     வலிமை, அதிகாரம், உரிமை, உடைமை. இச் சொல் உறைப்பையும்      எரிவையும் குறிப்பதும் கடுமைபற்றியே.

     காரம்-காரன் = உரிமையாளன், உடையவன். காரன்-காரி =
     உரிமையாட்டி, உடையவள்.

     அதிகாரம் என்னும் சொல்லும் மிகுதிப்பொருளை அடிப்படையாகக்
கொண்டதே. அதிகரி = அதிகாரம். அதிகரித்தல் = மிகுதல்.

     வடமொழியிலுள்ள க்ரு (செய்) என்னும் வினையடியாகப் பிறந்து,
செய்பவனைக் குறிக்கும் கார என்னும் சொல்லினின்று "காரன்" ஈறு
திரிந்ததாக ஆரியவழிப் புலவர் கூறுவது ஒருசிறிதும் பொருந்தாது.
கும்பகார என்னும் வடசொல் குடத்தைச் செய்யும் குயவனையே குறிக்கும்.
குடத்துக்காரன் அல்லது பானைக்காரன் என்னும் தென்சொல், அக்
கலத்திற்கு உரியவனையே குறிக்கும்.

     ஆட்டுக்காரன், கடைகாரன், கப்பற்காரன், காய்ச்சற்காரன், குடைகாரன்,
குருவிக்காரன், கூலிக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன், தட்டுக்காரன்,
திருநெல்வேலிக்காரன், தோட்டக் காரன், நிலத்துக்காரன், பட்டக்காரன்,
பணக்காரன், பாளையக் காரன், பிள்ளைகுட்டிக்காரன். புள்ளிக்காரன்,
புன்செய்க்காரன், பெருமைக்காரன், பொறாமைக்காரன், மாட்டுக்காரன்,
முட்டைக் காரன், வண்டிக்காரன், வாடிக்கைக்காரன், வீட்டுக்காரன்,
வெள்ளைக்காரன் முதலிய நூற்றுக்கணக்கான தென்சொற்கள்
உரிமையையன்றிச் செய்கையை எங்ஙன் உணர்த்தும்? கோழிக்காரன்
கோழியைச் செய்பவனா? முட்டைக்காரன் முட்டையைச் செய் பவனா?
திருநெல்வேலிக்காரன் திருநெல்வேலியைச் செய்பவனா?

     கொள்ளைக்காரன், தையற்காரன், வேலைக்காரன் முதலிய
தொழில்பற்றிய சொற்களும், அத் தொழிலை உடையவர் அல்லது
அத் தொழிற்கு உரியவர் என்றே பொருள்படுவனவாகும். செய்பவர்
என்னும் பொருள் இவற்றிற்குப் பொருந்துவது தன்னேர்ச்சியே.

     அண்ணன்காரன், தம்பிகாரன் என்னும் முறைபற்றிய சொற்களும்,
அம் முறையை உடையவன் என்றே பொருள்படும்.

     'காரன்' ஈறு பெண்பாலிற் காரி என்றாகும்.