|
விள்3 (பிளவுக் கருத்துவேர்) |
பிளவுக்கருத்தினின்று பிரிவு, விரிவு, திறப்பு, வெடிப்பு, நீங்கல், செலவு, வெளிவரல், உள்ளீடின்மை, வெறுமை, வறுமை, பயனின்மை முதலிய பல கருத்துகள் கிளைக்கும். |
புல்லுதல் = துளைத்தல். புல் = உட்டுளை, உட்டுளைப் பொருள், உட்டுளையுள்ள புறக்காழ் நிலைத்திணை (தாவரம்), மூங்கில். |
அறுகம்புல், புல்லாங்குழல் முதலிய சொற்களை நோக்குக. |
புல் - புள் - பொள் - பொழு - போழ். |
புள் - பிள். பிள்ளுதல் உடைதல், பிளத்தல், பிரிதல் , நீங்குதல். |
| பிள் - பிள. பிளத்தல் = பிடுதல், துளைத்து அல்லது வெட்டி உடைத்தல், பிரித்தல். | |
பிள் - விள். வுகரம் சொன்முதல் வராமையால், 'வ' முதல் 'வௌ' வரைப்பட்ட வகரமுதற் சொற்கள், பெரும்பாலும் பகர அல்லது மகரமுதற் சொற்களின் திரிபாகவே யிருக்குமென்று, முன்னர்க் கூறியதை நினைவுறுத்துக. |
விள்(ளு)தல் = (செ. கு.வி.) 1. உடைதல். அந்தக் குடம் கீழே விழுந்ததனால் விண்டு போயிற்று (உ.வ.). 2. வெடித்தல் (யாழ். அக.). 3. விரிதல், மலர்தல் (சூடா.). 4. நீங்குதல். 5. விட்டகலுதல்,செல்லுதல். தெ. வெள்ளு. 6. வேறுபடுதல், மாறுபடுதல். "விள்வாரை மாறட்ட வென்றி மறவர்" (பு. வெ. 1:14) |
(செ.குன்றாவி). 1. பிளத்தல். பழத்தை இரண்டாக விண்டான் (உ.வ.). 2. வாய் முதலியன திறத்தல். "வாய் விண்டு கூறும்" (பாகவத. 1, தன்மபுத்திர. 29). 3. சொல்லுதல். "தன்னிடத்து வந்து விள்ளான்" (திருவாலவா. 33.10). 4.வெளிப்படுத்துதல். "உமக்கே விண்டு பேசினல்லால்" (அஷ்டப். திருவரங்க. 70). 5. பிதிர் முதலியன விடுத்தல். இந்தப் பிதிரை விள்ளு (உ.வ.). 6.பகைத்தல் "நறவ மார்ந்தவர்...விண்டு...மண்டினார்" (சீவக. 418). 7. நீங்குதல். "வினைகளும் விண்டனன்" (தேவா. 928:7). |
| விள்கை = விட்டகலுகை. "விள்கை விள்ளாமை விரும்பி" (திவ்.திருவாய்.1:6 :5). | | விள்ளல் = 1. பிரிகை. "விலங்கிற்கும் விள்ள லரிது" (நாலடி. 76). 2. மலர்கை. (சூடா). | |