| என்று கூறப்படுகின்றன. பேருரிமைத்தாளின் பெருமையை இது நன்கு எடுத்தக் காட்டவதாகும். ஆங்கிலநாட்டில் அரசியல் மன்றம் ஏற்பட்டு வேரூன்றுவதற்கு மூன்றாம் ஹென்ரி அரசரின் திறமையின்மையும் முதல் எட்வர்டின் திறமும் இரு வேறு வகைகளில் காரணங்களாய் அமைந்தன. ஜான் அரசன் 1215-ல் பேருரிமைத்தாள் வழங்கியபின் மறு ஆண்டிலேயே மாண்டான். அப்போது மூன்றாம் ஹென்ரி சிறுவனாகவே இருந்தபடியால் பெருமக்கள் பாதுகாப்பாளரை அமர்த்தி ஆட்சி நடத்தினர். அரசன் நேராக ஆட்சிக்கு வந்ததும் அவன் தன் ஃபிரஞ்சு நாட்டு மனைவி மூலம் தனக்கு உறவினரான வெளிநாட்டினரைப் பெருவாரியாக இங்கிலாந்தின் அரசியல் வாழ்வில் புகுத்தியும் கடுவரிகள் இட்டும் மக்களிடையே மனக்கசப்பை உண்டு பண்ணினான். அதற்கிடையில் தற்செயலாக அவன் தன் கீ்ழ்ப்பட்ட ஃபிரஞ்சு நாட்டு பகுதி ஒன்றின் ஆட்சியை நடாத்திய தன் உறவினனாகிய ஸைமன் டி மாண்ட்ஃபோர்ட் என்பவனை அந்நிலையிலிருந்து நீக்கிப் பகைத்துப்கொண்டான். ஆட்சி முறையில் பெருஞ்செயலறிவுபடைத்த ஸைமன் பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் தன் மைத்துனனாகிய அரசனை எதிர்த்து நாட்டு மக்களின் தலைவனானான். வெளி நாட்டினனாகிய அவன் வஞ்சமே ஆங்கில அரசியல் வாழ்வுக்கு ஒரு தஞ்சமாயிற்று. 1254-ல் மூன்றாம் ஹென்ரிக்குப் பொருளுதவி மிகவும் வேண்டியிருந்தது. அதற்காக அவர் கூட்டிய கூட்டத்திலேயே பெருமக்கள் (barons) தலைமக்கள் (clergy) ஆகியவர்களுடனாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நான்கு பேரை (knights) மாவட்டத்தலைவர் (Sheriff) |