| களா இருந்தமையாலும் இவ்வுரிமைநிறைவு முற்றிலும் பிஞ்சில் கனிந்த பழமாகவே அமைந்து நின்றது. இத்தன்மையை இதனையடுத்து தேர்வுக்காலம் நன்கு காட்டும். லங்காஸ்டர் கால்வழியினர் காலமும் யார்க்கியர் கால்வழியினர் காலமும் (அஃதாவது 1399 முதல் 1485 வரையுள்ள பகுதியே) தேர்வுக்காலம் எனலாம். இக்காலத்தில் அரசியல் மன்றத்தின் தேர்வு மூலம் அரசுரிமை பெற்ற லங்காஸ்டர்களும் வரன்முறைப்படி அரசுரிமையுடைய யார்க்கியர்களும் போரிட்டுக்கொண்டே இருந்தனர். இப்போரே வனமல்லிகைப் போர் (Wars of the Roses) எனப்படும். ஆறாம் ஹென்ரியரசன் காலத்தில் லங்காஸ்டர்களை யார்க்கியர் தலைவன் எட்வர்ட் வென்று நான்காம் எட்வர்ட் ஆனான். அடுத்த அரசன் மூன்றாம் ரிச்சர்டை லங்காஸ்டர் குடியின் கிளைக்குடியாகிய டியூடர் குடித்தோன்றலான ஏழாம் ஹென்ரி வென்று டியூடர் ஆட்சியை நிறுவினான். இங்ஙனமாக அரசியல் மன்றம் அரசனை வீழ்த்தவும் அமர்த்தவும் உரிமை கொண்டுவிடிலும் அவ்வுரிமையைச் செயற்படுத்த முடியாமல் போயிற்று. மன்றத்தேர்வுரிமை உடைய லங்காஸ்டர்களும் வரன்முறை உரிமை உடைய யார்க்கியர்களும் போரிட்டே தத்தம் உரிமையை நாட்ட வேண்டி வந்தது. ஏழாம் ஹென்ரி திறம்பட இவ்வுரிமைப் போராட்டத்திற்கிடமில்லாமல் மன்றத்தேர்வு உரிமையுடைய தன் குடி உரிமையைப் பெற்றதுடனமையாமல் வரன்முறை உரிமையுடையதான மாற்றார் குடியில் தோன்றிய எலிஸபெத் இளவரசியையும் மணந்து கொண்டான். அவன் ஆட்சித் தொடக்கத்துடன் தேர்வுக் காலம் முடிவு பெறுகிறது. |