| ளாது தட்டிக்கொடுத்து வந்தனர். அவர்கள் ஆட்சியுடன் உள்முதிர்வுக் காலமும் முடிகின்றது. ஸ்டியூவர்ட் அரசருள் முதலாவது ஜேம்ஸ் ஆட்சி முதலாக இரண்டாவது ஜேம்ஸ் ஆட்சி முடிய (1605 முதல் 1688 வரை) அரசியல் போராட்டக் காலமாகும். டியூடர் அரசரின் ஆற்றலும் இன்றி, நாநயமும் அறிவும் சற்றும் இல்லாத ஸ்டூவர்ட் அரசர்கள் உரம் பெற்று வளரும் குழந்தையிடம் வீம்பு பேசினர்; போட்டியிட்டனர். முரண்டிய பிள்ளையின் முரண்டு வளர்ந்து வீர இளைஞன் மறஎதிர்ப்பாயிற்று. முதலாம் ஜேம்ஸ் அரசன் அந்நாளைய அரசர்களிடையே கல்வி கேள்விகளில் ஒப்புயர்வற்றவன். ஆனால் அவன் அறிவு முற்றிலும் நூலறிவு. வாழ்க்கையில் அது ஏட்டுச்சுரைக்காயாய்ப் பயனற்றதாயிற்று. எனவே வரலாற்றில் அவன் `உலகின் அறிவிற் சிறந்த மூடன்` அழைக்கப்படுகிறான். அரசியல் மன்றிலும் வெளியிலும் அவன் ஓயாது தற்பெருமையுடன் " அரசன் இறைவன் திருவுருவம்; அவன் செயல்கள் இறைவன் செயல்கள் போலக் கேள்விக்கு அப்பாற்பட்டவை" என்று வீம்பு பேசுவான். இது கேட்டுச் சீற்றமுற்ற அரசியல் குழந்தை முறைத்துக்கொண்டால் அவன் அதனினும் சீறி எழுந்து இன்னும் உயர்ந்த குரலில் தன் பல்லவியைப் பாடுவான். ஆயினும் `அறிவு நிறைந்த மூடன் ` என்ற பெயரும் அவனுடைய இயற்கைச் சோம்பற் குணமும் இம்முரண்டுதல் போராக வளராமல் காத்தன. குழந்தை முதலில் சீறி முரண்டினாலும் பின் அவனைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிற்று. அவனும் ` போய்த் தொலை; உனக்கு இன்று உணவில்லை’ என்று கூறும் தந்தை போன்று மன்றத்தைக் கலைத்துவிட்டுச் சில நாள்தானே ஆட்சி செய்வான். |