| ஜேம்ஸின் பிள்ளையான முதல் சார்ல்ஸிடம் ஜேம்ஸின் வீம்பும் அரசன் தெய்வீக பிறவி என்ற எண்ணமும் தொடர்ந்து வேரூன்றின. ஆனால் அவன் ஜேம்ஸைப் போன்ற கனவீரனாயிராமல் செயல் வீரனாகத் தலைப்பட்டான். மன்றம் முரண்டியபோது ஜேம்ஸைப் போல் தட்டிக் கழிப்பதற்கு மாறாக அவன் வீறாப்புடன் எதிர் நடவடிக்கை யெடுத்தும் தன்னை எதிர்த்த மன்றத்தினை முற்றிலும் விலக்கியும் ஆளத் திட்டமிட்டுவந்தான். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்றபடி மன்னன் முரண்டு காட்டக்காட்ட மன்றத்தில் வீறாப்புமிக்க கட்சிகள் கை யோங்கிற்று. சார்ல்ஸிடம் டியூடர்களின் நயத்தில் ஒரு சிறுகூறு இருந்திருந்தால் கூட அவனுக்கு வலிமை தரும் பல நிலைமைகள் இக்கிளர்ச்சியிடையேயும் ஏற்பட இடமிருந்தது. வீறாப்பான கட்சிகள் எழுந்தோறும் நடுநிலையாளர்கள் விலகி முடியரசுப் பக்கம் சாயலாயினர். மன்றில் வீறாப்பு மிகுந்தோறும் பின்னிடைந்தவர்கள் முடியரசுக் கட்சியில் சேர்ந்து அதனை விரிவுபடுத்திக் கொண்டே வந்தனர். ஆனால் மன்றக் கட்சியின் தொகை குறைந்து கொண்டே வந்தாலும் அதன் வீர உணர்ச்சியும் ஒழுங்கும் பயிற்சியும் வளர்ந்து கொண்டே வந்தன. அதனால் அதன் வலிமை குன்றுவதற்கு மாறாக ஓங்கி வளர்ந்தது. இறுதியில் கிராம்வெல் என்ற ஒப்பற்ற படைத்தலைவன் தலைமையில் பயிற்சிபெற்ற `இருப்புச் சுவர்கள்’ (Ironsides) என்ற படை, அரசர் படையை வென்றதுடன் அரசனையும் சிறைப்படுத்திற்று சிறையிலும் சார்ல்ஸ் தன் கட்சியுடன் சூழ்ச்சி செய்ய முயன்றான். இது கண்டுபிடிக்கப்படவே உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக அரசனாகிய அவன் நாட்டு பகைவனெனக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். |