| லங்காஸ்டிரியப் புரட்சிக்குப் பின் மறுபடியும் ஆங்கில நாட்டு வரலாற்றில் இங்ஙனமாக ஒரு பெரும்புரட்சி தோன்றிற்று. இதனை கிராம்வெல்லின் புரட்சி அல்லது சமயத்தூய்மையாளர் புரட்சி (Cromwellian Revolution or Puritan Revolution) என்பர். இப்புரட்சியே உண்மையில் நெடுநாட்பின்னர் ஏற்பட்ட ஆங்கிலப் புகழ்மிக்க புரட்சிக்கும் அதன்பின் வந்த ஃபிரான்சு, அமெரிக்கா முதலிய பிறநாட்டுப் புரட்சிகளுக்கும் தொலைத் தூண்டுதலாயிருந்த தென்னலாம். ஏனெனில் கிராம்வெல் அமைக்க முயன்ற அரசியலில் முடியரசு இல்லை. சமயச்சார்பில் குருக்கல் இல்லை. மொழி உரிமை ஆண் பெண் அனைவர்க்கும் தரப்பட்டது. இவற்றுள் பல கூறுகள் பிரிட்டனில் 20-ம் நூற்றாண்டுவரை தான் செயலுருப்பெற்றன. இன்னும் செயலுருப்பெறாத பகுதிகளும் உண்டு. முடியரசு ஒழிப்பு, பெருமக்களின் அவைஒழிப்பு ஆகியவை இன்றும் வெளித்தோற்றத்திலே இல்லாதவையே. கிராம்வெல் காலத்திற்கு எவ்வளவோ அப்பாற்பட்ட இப்பெரும்புரட்சி கிராம்வெல் கருத்தில் தான் கனாவுருவில் நின்றது. ஆங்கிலமக்கள் அன்றும், நெடுநாட்பின்னரும் அதனை உணரவில்லை. எனவே லங்காஸ்டிரியப் புரட்சியைவிட இப்புரட்சி ஆங்கில நாட்டின் முதிராப்பிறவியாய்ப் பயனற்றதாயமைந்தது. கிராம்வெல் இறந்ததே ` உள்ளதும் போயிற்று நொள்ளைக்கண்ணா’ என்றபடி கிராம்வெலின் வீறாப்பான கொள்கைமட்டு இன்றி நடுநிலையாளர் கொள்கைகள் கூட மறக்கப்பட்டும் பழைய அரசாட்சியே இரண்டாம் சார்ல்ஸ் வருகையுடன் மீண்டும் வந்தது. |