| அவர்காலத்து மக்கள் எவரும் காணவுமில்லை; உணர்ந்து ஒத்துழைக்கவும் முடியவில்லை. எனவே அவை கனவுலகில் தோல்வியுற்றன. பொருளியல் துறையில் வால்போலின் முறைகளும் அவ்வாறே. அவற்றின் உயர்வையும் நற்பயன்களையும் பிற்காலத்தார் போற்றினும் காலத்தின் சூழலுக்குட்பட்ட குறுகிய நோக்கதுடைய அந்நாளைய மக்கள் அவற்றை எதிர்த்தனர். எதிர்ப்பு மிகுதியாக ஆக வால்போல் தலைமைநிலை நழுவி எதிரிகளிடம் சென்றது. 1741-ல் அவர் அரசியல் நிலையினின்றும் நீங்கி 1745ல் உலகுநீத்தார். அவருக்குப் பொதுமக்கள் எதிர்ப்பைத் தந்த அவரது புதிய சீர்திருத்தம் இறக்குமதி வரிகளை நீக்கி அவற்றை உள்நாட்டு வரிகளாக மாற்றியதேயாகும். இது மிகச் சிறந்த முறையெனப் பிற்காலத்தில் ஏற்கப்பட்டுப் பின்பற்றப்பட்டது. ஹனோவரிய அரசர்களில் மூன்றாவது அரசர் மூன்றாம் ஜார்ஜ் என்பவர். இவர் முதலிரண்டு அரசர்களிடமிருந்தும் எல்லாவகையிலும் மாறுபட்டவர். இவர் தந்தையையும் பாட்டனையும்போல் ஆங்கிலநாட்டாரின் தாய் மொழியையும் பழக்கவழக்கங்களையும் அறியாதவரல்லர் நாட்டுமக்களுடன் நாட்டுமகனாய் அவ்விருதுறையிலும் ஒன்றுபட்டவர். அத்துடன் அவர் பேரவாவுடையவரனதால் தம் தந்தையையும் பாட்டனையும்போல் அரசியல் தலைமை முழுமையையும் அமைச்சர் குழுவினிடமே விட்டு விட ஒருப்படவில்லை. ஸ்டூவர்ட் அரசர்கள் மனத்துடன் கொண்ட கனவுகளின் சாயல் அவாமனத்திலும் ஏற்பட்டன. ஆகவே அவர் அரசியல் மன்றத்தின் ஆதரவை நாடி அதில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களைக் கொள்ளாமல், தன் மனத்துக்குப் பிடித்த கொள்கையுடையவர் |