| மும் மிகுதியாக ஆக இத்தகைய நேர்நிலையாளரான முற்போக்காளர் பலர் அவ்வியக்கத்தினின்றும் விலகினர். இறுதியில் நெப்போலியன் பேரவாவால் புரட்சி சென்றொடுங்க அதன் எதிர்த்தாக்குத லியக்கமான மூன்றாம் நெப்போலியனின் வல்லாட்சி முறை வந்தபின் எங்கும் புரட்சியியக்கம் அடக்கப்பட்டது. பொதுவில் பூத உடல் இறந்த பின்னர்தான் புகழுடல் வலிவு பெறும் என்று கூறவதுண்டு. ஃபிரெஞ்சுப் புரட்சி வகையில் இது உண்மையாயிற்று. வெளிப்படையான புரட்சி ஒடுக்கப்பட்ட பின்பே அதன் உள்ளார்ந்த உயிர்ப்பண்புகளின் ஆற்றல் வெளிப்பட்டது. அதன் ஒளிப்பரப்பிற்பட்ட நாடுகள் அனைத்துமே பெரிய மாற்றங்கள் அடைந்தன. அவ் வொளிவிளக்கை முதலில் ஏற்றிய நாடாகிய பிரிட்டன் அதன் தாக்குக் குள்ளாகாமலிருத்தல் கூடுமோ? ஐரோப்பாவின் தலை நிலத்துமக்களைப் போல ஆங்கிலமக்கள் உச்சநிலைக் கருத்தியல் உலகிற்குதிப்பவரல்லர் ஆயினும் ஃபிரெஞ்சுப் புரட்சியியக்க ஒளியைக் கண்ட அவர்கள் தம் அரசியல் மன்ற அமைப்பு, மொழித்தாள் முறை ஆகியவற்றின் ஊழல்களை முன்னிலும் மிகுதியாகக் கவனித்து அவற்றை ஆர்வத்துடன் ஆராய்ந்து சீர்திருத்தம் வேண்டுமென்று கூக்குரலிடத் தொடங்கினர். தொடக்கத்தில் வெறியாளரால் ஏற்பட்ட வெருட்சியின் எதிர்த்தாக்கு நீங்கியபின் முற்போக்குடைய தலைவர் பலர் இக்குறை நீக்க முன்வந்தனர். அதன்பயனாகவே 1832-ம் ஆண்டு அரசியல் மன்றச் சீர்திருத்தமும் அதனைப் பின்பற்றிய மற்றச் சீர்திருத்தங்களும் தோன்றின. இவை வரும் பிரிவிற் குறிக்கப்படும். |