பக்கம் எண் :

78தமிழகம்

"ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்--சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால்
செந்தமிழே தீர்க்க சுவா"
       எனக் காட்டியுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ்வுணர்ச்சி தமிழ்நாட்டில் நீண்டநாள் உள்ளதென்பது நனிவிளங்கும்.

5. எழுத்து

"எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு."

 (குறள்)

       எழுத்து, சுவடி முதலிய பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ்மொழிக்கு வரிவடிவில் எழுதப்படும் எழுத்துக்கள் தொன்மையே உண்டு என்பதை விளக்குகின்றன. 1இஞ்ஞான்று தமிழில் விளங்கும் நூல்களுள் தொல்காப்பியம் பழமையுடையது. இதன் காலம் கி. மு. 350 க்குப் பிற்பட்டதன் றென்பது சரித்திராசிரியர்களின் கருத்து. வேதங்கள் வியாசரால் நான்கு கூறுகளாகச் செய்யப்படுவதன் முன் இயற்றப்பட்ட தென்பர் நச்சினார்க்கினியர். அப்படியாயின் தொல்காப்பியர் காலம் ஐயாயிரமாண்டுகளுக்கு முன்னாகும். தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரமென ஒரு பகுதி உள்ளது அதன்கண் எழுத்துக்களின் பிறப்பு வடிவு முதலியன கூறப்படுகின்றன. ஆகவே, தொல்காப்பியருக்குப் பன்னெடுங் காலத்துக்குமுன் தமிழில் எழுத்துக்கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
       1. தமிழ் எழுத்துக்கள் பினீசியரால் இந்திய மக்களுக்கு உதவப்பட்டதென்றும் பிறவாறும் ஆராய்ச்சியாளர் கருதலாயினர். மொகஞ்சதரோ ஆராய்ச்சிக்குப்பின் பிராமி எழுத்துக்கள் மொகஞ்சதரோ எழுத்துக்களாகிய பழைய தமிழ் எழுத்துக்களின் வேறுபாடென்றும், பிராமி எழுத்துக்களினின்றும் பினீசிய கிரேக்க உரோமன் எழுத்துக்கள் தோன்றினவென்றும், இன்றைய தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களினின்றும் படிப்படி வளர்ச்சியடைந்துள்ளன என்றும் துணியப்பட்டுள்ளன.