பக்கம் எண் :

53
 
     கி.மு.9-ம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை தென்னாட்டு யானைகள்
அசிரியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. கி.மு.6 முதல் 2-ம் நூற்றாண்டு வரை
பெருக்கமுற்றது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புத்த நூலாகிய பவேருசாதகம்
தென்னாட்டிலிருந்து முதல் முதல், மயில் பாபிலோனுக்குச் சென்றது பற்றிய சுவையான
கதை ஒன்றைக் கூறுகிறது.
 
     தென்னாட்டு வணிகருடன் வட ஆரியர் கடல் கடந்து வாணிகம் செய்வதை
ஆரிய சுமிருதி வாணரான போதாயனர் கண்டிக்கிறார். கி.மு.4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சாணக்கியர் அல்லது கௌடில்யர் தென்னாட்டு வாணிகத்தைச் சிறப்பித்துள்ளார். சிந்து
கங்கைவெளி அந்நாளில் கம்பிளி, தோல், குதிரை ஆகிய மலிவான சரக்கையே
அனுப்பிற்று என்றும்; ஆனால் தென்னாடு முத்து, வைரம், தங்கம் ஆகிய விலையேறிய
பொருள்கள் அனுப்பிற்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
     யவனர் தமிழகத்திலிருந்து மிளகு, இஞ்சி, அரிசி, மெல் ஆடை ஆகியவற்றைப்
பெற்றனர். திரைச்சீலை, பாவை விளக்கு முதலிய கலைப் பொருள்களையும்,
கோட்டைகளுக்கான பொறிகளையும், அரசர் பெருமக்களுக்கான புட்டி மதுவையும்
தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். யவனப் பெண்டிர் ஆடர் மகளிராகவும், ஆடவர்
மெய்க்காப்பாளராகவும் கலைஞராகவும் அல்லது காவிரிப்பூம்பட்டினத்திலும் யவனச்
சேரிகள் இருந்ததாகத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன. மேற்குக் கடல் துறைமுகமாகிய
முசிறியில் (கிராங்கனூர்) உரோமக் குடியிருப்பும் கோயிலும் உரோமக் காவல் வீரர்
2000பேரும் இருந்ததாக *பியூட்டிங்கெரியன் பட்டயம் குறிக்கிறது. புதைபொருள்
ஆராய்ச்சியால் புதுச்சேரியிலும் உரோமக் குடியிருப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இருந்ததாக அறிகிறோம்.

* Peutingerian Tables