"இந்த ஜன்மத்தை எல்லாரும் பகைக்கிறார்கள். ராஜகுமாரர் பார்த்தாலும் பிரியப்படத்தக்க ரூபம் எனக்கு வேண்டும்? என்றது. பாம்பின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு முனிவர் சொல்லுகிறார்: - "சரி, உனக்கு அப்படியே நினைத்தபோது மனுஷரூபம் வரும்; ஆனால் எவனிடத்தில் வார்த்தை சொல்லும்போது உனக்குப் பயமேற்படுகிறதோ அவனுடன் அதிக நேரம் தங்கக்கூடாது. தங்கினால் அவனாலே உனக்கு மரணம் நேரிடும்? என்று விடை கொடுத்தனுப்பினார். பின்னொரு நாள் இரவில் ரோஜாப் பூ மனிதப் பெண் வேஷந்தரித்துக் கொண்டு, வஞ்சி ராஜாவின் அரண்மனையைச் சார்ந்த சோலையிலே ராஜகுமாரன் விளையாடும் நிலா முற்றத்துக்கருகே போய் நின்று கொண்டிருந்தது. அங்கு ராஜகுமாரன் வந்தான். இந்தப் பெண்ணை நோக்கி இவள் அழகை வியந்து "நீ யார்?" என்று கேட்டான். "சிங்கள ராஜன் மகள்? என்று ரோஜாப் பூ சொன்னாள். ராஜகுமாரன் திகைத்துப் போய் "என்னது! சிங்கள ராஜ்யமா? இந்த நேரத்திலே இங்குத் தனியே எப்படி வந்தாய்? யாருடன் வந்தாய்?" என்றான். அதற்கு ரோஜாப் பூ:- "எனக்கொரு முனிவர் ஒரு மந்திரங் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதைக்கொண்டு நினைத்த வேளையில் நினைத்த இடத்திற்கு வான்வழியாகப் பறந்து செல்வது வழக்கம். இந்த வழியே பறந்து வருகையில் நிலா வொளில் இந்தச் சோலையும் நிலாமுற்றமும் கண்ணைக் கவர்ந்தன. இங்கு சற்றே நின்று பார்த்துவிட்டுப் போவோமென்று வந்தேன்? என்றாள். இதற்குள் ராஜகுமாரன் இவளுடைய அழகிலே மோகித்துப் போய் "உன்னைப் பார்த்தால் தேவ ரம்பை அல்லது நாக கன்னிகை போலே தோன்றுகிறது? என்றான். "நாக கன்னிகை? என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ரோஜாவிற்கு உடம்பெல்லாம் படபடவென்று நடுக்கங் கண்டது. |