பக்கம் எண் :

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

"ஏன் பயப்படுகிறாய்?" என்று ராஜகுமாரன் கேட்டான். ரோஜாவுக்கு முனிவர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. இனி இங்கே நின்றால் அபாயம் நேரிடுமென்று பயந்து மிக வேகத்தில் ஓடி மறைந்து போய்விட்டது பாம்புக்குட்டி. பின்னொரு நாள், மாலை வேளையில் மரஞ்செடியில்லாத பொட்டல் வெளியிலே காட்டுப் பாதைக்குச் சமீபத்தில் ஆழ்ந்த கிணறொன்றின் அருகேயுள்ள புதரில் ரோஜாப் பூ தனியாக இருக்கும்போது, அவ்வழியே யௌவனமும் அழகுமுடைய ஒரு புரோகிதப் பிராமணன் போய்க் கொண்டிருந்தான். தூரத்தில் வரும்போதே அவனைக் கண்டு ரோஜாப் பூ பெண் வடிவமாக மாறி நின்றது. பார்ப்பான் பார்த்தான். நடுக்காடு; தனியிடம்; மாலை நேரம்; இவளழகோ சொல்லி முடியாது. "இவள் யாரடா இவள்?" என்று யோசனையுடன் சற்றே நின்றான். ரோஜாப் பூ அவனைக் கூப்பிட்டு, "ஐயரே, தாகம் பொறுக்க முடியவில்லை. கிணற்றில் இறங்கப் பயமாக இருக்கிறது. நீர் இறங்கி உமது கையிலுள்ள செம்பிலே சிறிது தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தால் புண்ணியமுண்டு? என்றாள பார்ப்பான் சந்தோஷத்துடன் கிணற்றிலே இறங்கப் போனான். தண்ணீருக்கு மேலே ஒரு நீர்பாம்பு தென்பட்டது. உடனே அவன் ரோஜாவை நோக்கித் திரும்பி, "ஆகா! பாம்பைப் பார்த்தாயோ?" என்றான்.

ரோஜாவுக்கு உடம்பெல்லாம் வெயர்த்துப் போய்க் கையும் காலும் நடுங்கலாயின.