பக்கம் எண் :

முதற் பகுதி - கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை

குயில் சொல்லுகிறது:-

"கேளாய் ரஸிக மாமா, கங்காதீரத்தில் ராமநகரம் என்ற ஊரில் ஒரு வண்ணான் வீட்டிலே 'பக்திவிஸ்தாரன்' என்றொரு கழுதை இருந்தது. தாய் சொன்ன வார்த்தையும் தட்டாது. யார் சொன்ன வார்த்தையும் தட்டாது. சிறு பிள்ளைகள் கல்லெறிந்தால் கனைத்துக் கொண்டு ஓட வேண்டாமோ? அதுகூடச் செய்யாது பொறுமையே அவதாரம் செய்தாற்போன்ற கழுதை. இந்தக் கழுதை ஒருநாள் நதிக்கரையிலே புல் மேய்ந்து கொண்டிருக்கையிலே பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மேல் இரண்டு காக்கைகள் பின் வருமாறு சம்பாஷணை செய்து கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளையெல்லாம் கழுதை கவனத்துடன் கேட்டது. ஒரு காகம் சொல்லுகிறது:-

"பிரயாகையில், கங்கையும், யமுனையும் வந்து சேரும் இடத்தில் ஒருவன் போய் விழுந்து பிராணனை விடும்போது அடுத்த ஜன்மத்தில் என்ன பிறவி வேண்டுமென்று நினைத்துக் கொள்ளுகிறானோ, அதே பிறவி அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். இந்த விஷயம் உனக்கு இதுவரை கேள்வியுண்டா?"

இதற்கு இரண்டாங் காகம்:- "உனக்கு யார் சொன்னார்கள்?" என்று கேட்டது..