முதற் காகம்:- "இன்னார் சொன்னார்களென்பதை உன்னிடம் சொல்லக்கூடாது. அது ரகஸ்யம். ஆனால் உண்மைதான், எனக்கு நிச்சயமாகத் தெரியும்." இரண்டாங் காகம்:- "உன்னிடம் சொல்லியது யார்?" என்று மறுபடியும் வற்புறுத்திக் கேட்டது. முதற் காகம்:- "அட நம்பிக்கையில்லாத ஜந்துவே! உனக்கு நல்ல கதி ஒரு நாளும் ஏற்படாது! யார் சொன்னதென்றா கேட்கிறாய்? என்னுடைய குரு சொன்னார். அவரைப் போன்ற ஞானி பிரம்ம லோகத்திலே கூடக் கிடையாது. ஒரு காலத்தில் பிரமதேவனுக்குப் படைப்புத் தொழில் சம்பந்தமாக ஒரு சந்தேகமேற்பட்டது. உடனே பிரம்மா நாரதரை அனுப்பி என் குருவை அழைத்து வரச் சொல்லித் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டார்." இந்த வார்த்தையைக் கேட்டவுடனே இரண்டாங் காகம் கலகலவென்று சிரித்து, அங்கிருந்து பறந்தோடிப் போய்விட்டது. சம்பாஷணை முழுதையும் மிகுந்த சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்த கழுதை உடனே அவ்விடத்திலிருந்து புறப்பட்டு, இராப்பகலாக நடந்து "திரிவேணி சங்கமம்" (அதாவது, பிரயாகையில் கங்கையும் யமுனையும் கூடுமிடம்) வந்து சேர்ந்தது. அந்த இடத்திலே போய்க் கழுதை பின்வருமாறு நினைத்துக் கொண்டு முழுகிப் பிராணனை விட்டது:- "இந்த வடதேசத்திலே எனக்கு சந்தோஷமில்லை. அடுத்த ஜன்மம் தென்னாட்டிலே பிறக்க வேண்டும். ஒரு விதமான குடும்பத் தொல்லையுமில்லாமல், எல்லா இடங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சாரம் செய்துகொண்டு, எல்லா ஜனங்களும் இனாமாகப் போடும் போஜனத்தைத் தின்றுகொண்டு, சந்தோஷத்துடன் வாழும் ஒரு மனித ஸந்நியாஸியாகப் பிறக்க வேண்டும். ஆனால் இந்தக் கழுதைப் புத்தி மாறாதபடி இருக்க வேண்டும். வெளிக்கு ஸந்நியாஸி போலிருந்து எல்லாரும் உபசாரங்கள் செய்தபோதிலும், என் மனதிற்குள்ளே 'நாம் கழுதை' யென்ற ஞாபகம் நிலைபெற்றிருக்க வேண்டும்." |