பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை

இவ்விதமான தியானத்துடன் இறந்துபோன கழுதை மறு ஜன்மத்திலே தென்னாட்டிலே ஒரு ஊரில் ஒரு நல்ல குடும்பத்திலே ஆண் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தது. தாய் தந்தையர் இந்தப் பிள்ளைக்கு "முத்துசாமி" என்று பெயர் வைத்தார்கள். முத்துசாமி மனத்திலே தான் கழுதையென்ற ஞாபகம் பரிபூர்ணமாக இருந்தது. பூர்வ ஜன்மத்தைப்பற்றி வேறு யாதொரு நினைவுமில்லை ஆனாலும், தான் மற்ற மனிதர்களைப் போலில்லையென்பதும், உள்ளுக்குள்ளே கழுதையென்பதும் அவன் சித்தத்தைவிட்டு நீங்கவில்லை. பதினாறு வயதாகு முன்பாகவே இவன் ஸந்நியாஸியாகி காவி வஸ்திரம் தரித்துக்கொண்டு ஊரூராகப் பிச்சை வாங்கியுண்ணும் துறையிலே இறங்கிவிட்டான். முத்துசாமி என்ற பெயரைத் துறந்து கர்த்தப ஸ்வாமிகள் என்று பெயர் வைத்துக் கொண்டான். கர்த்தபமென்றால் ஸம்ஸ்க்ருத பாஷையில் கழுதைக்குப் பெயர். இவனுக்குத் தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டு பாஷையும் தெரியும். வயிரவர் உபாஸனையுண்டு. உலகத்திலுள்ள பாஷைகளெல்லாம் ஸம்ஸ்க்கிருதத்திலிருந்து வந்ததாகவும், அது தமிழிலிருந்து முளைத்ததாகவும் ருஜூப்படுத்தி ஒரு புஸ்தக மெழுதினான். இப்போது பரத கண்டத்திலே நாலாயிரம் ஜாதிகளாகக் குறைந்து போய்விட்டது நியாயமில்லை யென்றும், ஆதியிலே நாற்பதினாயிரம் ஜாதிப் பிரிவுகள் இருந்தன வென்றும், அந்த ஏற்பாட்டை மறுபடி ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும், ருஜூப்படுத்தி மற்றொரு நூல் செய்யுளாக எழுதினான்.