பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை

நிகண்டைப் பார்த்து அதிலுள்ள தெய்வப் பெயர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, இவையெல்லாம் தன்னுடைய இஷ்ட தேவதையாகிய வயிரவ மூர்த்தியின் திரு நாமங்களென்று சொல்லி ஒரு நாமாவளி ஏற்படுத்தினான். பூணூல் போடும்வரை, பிராமணப் பிள்ளை சூத்திரனாகவேயிருப்பதால், அவன் பார்க்க மற்ற பந்துக்கள் ஆகாரம் பண்ணுவது கொடிய அநாசாரமென்று ஒரு கக்ஷி கொண்டு வந்தான். பூணூல் போடாத பிராமணக் குழந்தைக்குத் தாய் பால் கொடுக்கும்படி நேரிட்டால், பின்பு ஸ்நானஞ் செய்யாமல் வீட்டுப் பாத்திரங்களைத் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவள் ரௌரவாதி நரகங்களுக்குப் போவதுடன், அந்தக் குடும்ப முழுமைக்கும் அதோ கதி நேரிடுமென்று ஸ்தாபனம் செய்தான். இவனுக்கு வேண்டிய மட்டும் சிஷ்யர்கள் சேர்ந்து விட்டார்கள். பணமும் சேர்ந்தது. ஒரு மடம் கட்டினான். "நாற்பதினாயிர-ஜாதிபேத-பூர்வ திராவிட-வயிரவ-கர்த்தப-பிராமண-சிசு- பஹிஷ்கார-மஹா-மடம்" என்று அந்த மடத்துக்குப் பெயர் வைத்தான். இந்த மடத்துக்கு ரோஜாப் பூ என்ற பாம்புப் பெண் வந்து சேர்ந்தாள்.