பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

சாமியார் சொல்லுகிறார்:-

"கேளீர், சீடரே,

'ஜன்மநா ஜாயதே சூத்ர;

கர்மணா ஜாயதே த்விஜ;"

பிறக்கும்போது சூத்திரன்; பூணூல் போட்ட பிறகு தான் பிராமணன். இந்த விதிக்கு விலக்கே கிடையாது. உபநயனம் செய்த பிறகுதான் பிராமணப் பிள்ளைக்குப் பிராமணத்துவம் உண்டாகிறது. இதில் சந்தேகமில்லை. உபநயனம் செய்யும்வரை அவனுக்கு எச்சில், தீண்டல் ஒன்றுமேயில்லை. சண்டாளனைப் போல் வளருகிறான். அப்படிப்பட்ட குழந்தையை அவனுடைய தாயார் தீண்டி விட்டுப் பிறகு ஸ்நானம் செய்யாமல், மடைப் பள்ளியைத் தொட்டுச் சமையல் செய்தால், அந்த அன்னம் ஸ்வாமி நைவேத்தியத்துக்கு உதவாது. அவ்விதமான அன்னத்தை ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வோர் குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்வது போலே, பூஜை பண்ணப் போய்ப் பாவத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள்."

என்றிவ்வாறு, பல நியாயங்களைக் காட்டிச் சாமியார் தான் எடுத்த கக்ஷியை ஸ்தாபனம் செய்து கொண்டிருந்தார். சீடர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் தலையை அசைத்தசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தத் தருணத்திலே பாம்புப் பெண் வந்து சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணினாள். "உட்காரம்மா" என்று சாமியார் மெதுவான குரலிலே சொன்னார்.

உட்கார்ந்தாள். "நீ யார்?" என்று சாமியார் கேட்டார். பாம்புப் பெண் சொல்லுகிறாள்:-

"தாமரைப் பூ சேற்றிலே பிறக்கிறது. வண்டு காட்டிலே பிறக்கிறது. தாமரையைத் தேடி வண்டு வருகிறது. நான் சிங்கள தேசத்து ராஜன் மகள். பரத கண்டத்திலே, பற்பல இடங்களில் யாத்திரை செய்து கொண்டு, இந்த நகரத்துக்கு