எல்லா அநாகரிக ஜனங்களைக் காட்டிலும் கடைப்பட்டவர்களாயிருக்கிறார்கள். மிருகப் பிராயமாகக் காடுகளிலும் தீவுகளிலும் ஆடையில்லாமல், காதுகளிலும் உதட்டிலும் மூக்கிலும் துவாரங்கள் செய்து, சங்குகளையும் வளையங்களையும் தொங்கவிட்டுக் கொண்டு, மேலெல்லாம் பச்சை குத்தியவர்களாகத் திரியும் ஜனங்களுக்குக் கூட சுதந்திரம் உண்டு. இந்தத் தேசத்தார் அப்பெரும் பாக்கியத்தை இழந்து விட்டார்கள். இந்நாட்டில் கல்வி மங்கிப் போய்விட்டது. நூற்றிலே தொண்ணூறு ஜனங்கள் "அ" (ஆநா) எழுதச் சொன்னால் தும்பிக்கையொன்று வரைந்து ஆனை எழுதக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள். நமது சாஸ்திரங்களெல்லாம் செல்லரித்துப் போய்விட்டன. தேசத்து ஞானக்களஞ்சியத்திற்குக் காப்பாளிகளாக இருந்த பிராமணர் மடைத் தவளைகளைப் போலச் சிற்சில மந்திரங்களைச் சம்பந்தமில்லாமல் யாதொரு பொருளும் அறியாமற் கத்துகிறார்களே யல்லாது, உண்மையான ஞானப் பெருமை இவர்களுக்கு லவலேசமும் இல்லாமல் போய்விட்டது. மகரிஷிகளின் வழியில் தோன்றிய பிராமணர் மடைத் தொழில் செய்வதும், நீசர்களிடம் போய்த் தொண்டு புரிந்து பணம் வாங்கிப் பிழைப்பதும், இதைக் காட்டிலும் இழியனவாகிய எண்ணற்ற பிரவிருத்திகளிலே காலங்கழிப்பதும் சர்வ ஜனங்களும் அறிந்த விஷயங்களேயாம். இந்நாட்டின் கலைகள் அனைத்தும் மறைந்து போய்விட்டன. வீரியம் போய்விட்டது. பலம், சுகம், செல்வம் முதலிய நற்பொருள்களெல்லாம் அகன்று விட்டன. மனங்குன்றி உடல் சோர்ந்து உண்ண உணவின்றிக் கண் குழிந்து போயிருக்கும் அடிமை ஜாதியார் இந்நாட்டில் மகாபரிதாபகரமான வாழ்க்கை நிகழ்த்துகின்றார்கள். இன்ப நாடாகிய கந்தர்வ லோகத்தைப் பற்றிப் பேசி வருமிடத்தே, இத் துன்ப நாடாகிய பாரத தேசத்தைப் பற்றிச் சில வசனங்கள் எழுதிய பிழையை |