பக்கம் எண் :

இன்ப உலகம்

இந்நூல் படிக்கும் நண்பர்கள் பொறுத்தருள் செய்யுமாறு வேண்டுகிறேன். தர்மமே சூனியமாகப் போயிருக்கும் இத் தேசத்தில் சிலர் கந்தர்வலோகச் செய்திகளைப் பற்றி நான் எழுதப்போகும் விஷயங்கள் எழுதத்தகாதவை என்று கருதக்கூடும் என்ற சந்தேகம் எனக்குண்டாயிற்று. தர்மாதர்ம நிச்சயம் புரியும் அதிகாரமே இந்த அடிமை ஜனங்களுக்குக் கிடையாது என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டாகவே மேலே கண்ட வசனங்கள் எழுதப்பட்டவை யாகும். இது நிற்க.

கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று; அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. "இது என்ன ஒலி! எங்கிருந்து வருகிறது?" என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை. கண்களோ பரவசமடைந்து போயின. அங்குள்ள மாடங்களும், மாளிகைகளும், கோயில்களும், கோபுரங்களும், நாடக சாலைகளும் - எல்லா வீடுகளும் சந்திர கிரணங்களைப் போன்ற, குளிர்ந்த, இனிய பொன்னொளி வீசிக் கொண்டிருந்தன. இவற்றிலும், மற்ற மண், கல், கரை முதலிய எல்லாப் பொருள்களிலுமே அவ்வொளி அநேகவிதமான வர்ண வேறுபாடுகளுடன் கலந்திருக்கக் கண்டேன்.

இதை வாசிப்பவர்களே, நீங்கள் எப்போதாயினும் மாரிக்காலத்தில் மழையில்லாத மாலைப்பொழுதிலே கடற்கரை மணல் மீது இருந்துகொண்டு, வானத்தின் மேற்புறத்தில் சூரியன் அஸ்தமிக்கும்போது, ரவி கிரணங்கள் கீழ்த்திசையிலுள்ள மெல்லிய மேகங்களின் மீதும் இடையிடையே