தெரியும் வான வெளிகளின் மீதும் வீச, அதனின்றும் ஆயிரவிதமான மெல்லிய அற்புதகரமான வர்ண வேறுபாடுகள் தோன்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த அடிமை நாட்டிலே உங்களுக்குப் பிரகிருதி தேவியின் சௌந்தர்யங்களைப் பார்த்துப் பரவசமடைய சாவகாசம் அடிக்கடி ஏற்பட்டிராது. ஆனால், மேற்கூறப்பட்ட வர்ணக் காட்சியை ஒரு முறையேனும் கண்டிருக்க மாட்டீர்களா? அவ்வாறு கண்டிருப்பீர்களானால், நான் பார்த்த கந்தர்வ லோகத்தின் இயற்கை ஒரு சிறிது உங்களுக்குத் தெரியும்படி சொல்லக்கூடும். அங்கும் அநெக விதமான மேன்மை பொருந்திய திரவத்தன்மை கொண்ட வர்ண பேதங்களே காணப்பட்டன. ஆனால் அவற்றுடன் சந்திர கிரணங்களிள் மோகினித்தன்மை கலப்புற்றிருந்தது. இந்த ஒளியிலும், இன்னிசையிலும் களிப்புற்று நான் ஒரு க்ஷணம் இருக்கு முன்னாகவே, ஒரு கந்தர்வ யுவதி என் முன் வந்து, "வாராய், மானுட வாலிப, உனக்கு எங்கள் உலகத்தின் புதுமைகளையெல்லாம் காட்டுகின்றேன்" என்று கைகோத்து அழைத்துச் சென்றாள். நான் அந்த யுவதியின் வடிவைக் கண்டு மயங்கி மூர்ச்சித்து விடுவேன் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆயினும், அறிவைச் சிறிது ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவளை நோக்கி, "இங்கிருந்து நகர்வதற்கு முன்பு முதலாவது ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு விடை கூறவேண்டும்" என்றேன். "கேள்" என்று அவள், பொன் வீணை யொன்று மனிதர் பாஷையிலே பேசுவது போலச் சொல்லினள். "இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே! அது எங்கிருந்து வருகிறது?" என்றேன். "மேலே பார்" என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரைகளினிடையே, கொலுவீற்றிருக்கக் கண்டேன். |