பக்கம் எண் :

இன்ப உலகம்

"அவருடைய கிரணங்கள்" என்றாள்.

"சந்திர கிரணங்களா! சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

"சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நான்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கேகூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும்" என்றாள். இதைக் கேட்டு வியப்படைந்து, பிறகு அந்த யுவதியுடனே நடந்து சென்றேன்.

"பற" என்றாள்.

நான் கலீரென்று நகைத்துப் "பறக்கவா சொல்லுகிறாய்!" என்று வியப்புற்றேன்.

பால் போல வெண்மை கொண்ட வானத்தாற் செய்த இரண்டு சிறகுகள் அவளுக்கிருப்பதை நான் கண்டேன். முன்பு நோக்கிய போதே எனக்கு மூர்ச்சையுண்டாகத் தக்கதாகவிருந்த அந்த யுவதியைச் சிறிது வருணித்துப் பார்க்கலாமா? ஏதோ முயற்சி செய்கின்றேன்.

சந்திரகலை வீசும் முகம். அதன்மீது சிறியதும் மூன்று விரல் உயரமுடையதுமாய், மலர்களாற் செய்யப்பட்ட ஓர் கிரீடம். உயிரென்ற வண்டு வீழ்ந்து, சிறகிழந்து தள்ளாடும் கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின்பதற்கல்லாது, தின்னப்படுவதற்கமைந்தன போன்ற பற்கள்.

தனது பாலிறகுகளால் விகாரஞ் செய்யப்படாத திவ்விய உருவம். தீண்டுவோன் உடற்குள்ளே இன்ப மயமான மின்சாரம் ஏற்றுகின்ற கைகள். மண்ணுலகத்துப் பெண்களைப் பேசுமிடத்து கந்தர்வச் சாயல் என்கிறார்கள். இவளது இயலையும், சாயலையும் என்னென்பேன்? தெய்வ இயல், தெய்வச் சாயல்.