பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

சொல்லுகிறார். இந்த மந்திரோபதேசம் பெற்றவருக்கு இந்த ஜன்மத்திலே முக்தி" என்று சாமியார் சொல்லி நிறுத்தினார். ரோஜா ஒரு புன்சிரிப்புக் காட்டினாள். சாமியாருடைய ஆனந்தம் ஏறக்குறைய ஜன்னி நிலையிலே வந்து நின்றது. சாமியார் பின்னும் சொல்லுகிறார்:

"கேளாய், சிங்கள தேசத்து ராஜகுமாரியே; உன் பெயரென்ன? ரோஜாவா? ஆ ஹா ஹா! குலத்துக்கும் ரூபத்துக்கும் பொருத்தமான பெயர். கேளாய், ரோஜாவே, ஜன்மங்கள் கோடானு கோடி.

'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய், மரமாகிப் பல்விருக்க மாகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பொருமான்'

என்று திருவாசகம் சொல்லுகிறது."

மேற்படி பாட்டைச் சாமியார் தனது பெயருக்கும் இயல்புக்கும் பொருந்திய குரலிலே பாடிக் காட்டினார். இந்தப் பாட்டிலே 'பாம்பு' என்ற சொல் வந்தது. இருந்தாலும், ரோஜாவுக்குப் பயமுண்டாகவில்லை. இவன் முழுமூட னென்பது அவளுக்கு ஆரம்ப முதலாகவே தெரிந்து விட்டது. 'என்றாலும் குற்றமில்லை. நாம் இவனை விடக் கூடாது. இதுவரை எத்தனையோ மனிதர் கை தவறிப் போய்விட்டார்கள்; இந்த மடத்தை நாம் இஷ்டப்படி ஆளலாம். இதுதான் சரியான புள்ளி' என்று பாம்புப்பெண் உறுதி செய்து கொண்டாள்.