பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

சாமியார் சொல்லுகிறான்:-

"கேளாய், ரோஜாப் பெண்ணே! சிங்களராஜன் கண்ணே! ஜன்மங்கள் எண்ணத்தொலையாது - ஆற்று மணலைப் போலே; வானத்திலுள்ள நக்ஷத்திரங்களைப் போலே. 'புனரபி ஜனனம், புனரபி மரணம்' என்று சங்கராசாரியர் சொல்லுகிறார். இந்த ஜன்மங்களிலே மனித ஜன்மம் சிறந்தது. கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்திலே இத்தனை மேலான நரஜன்மத்தை எடுத்துத் தக்க குருவைத் தேடியடைந்து மோக்ஷத்துக்குப் போகும் உபாயத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் மறுபடி தாய் வயிற்றிலே பிறந்து பத்து மாதமிருந்து துயரப்பட்டு, மண்ணிலே பிறந்து பலவகைத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உனக்குத் தெரியாத விஷயமொன்றுமில்லை. நம்முடைய வைரவ மந்திரம் உனக்குக் கிடைக்கப் போகிறது. நீ பெரிய பாக்கியசாலி" என்றார். கதையைச் சுருக்கி விடுகிறேன்.

மறுநாள் காலையிலே பாம்புப் பெண் ஒரு நாகரத்தினத்தைக் கொண்டு வந்து சாமியார் காலிலே காணிக்கையாக வைத்து மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டாள். சில தினங்களிலே சாமியார் இவள் சொல்லியபடி யெல்லாம் கூத்தாடுகிற நிலைமைக்கு வந்துவிட்டார், என்று மதுகண்டிகை என்னும் குயில் ரஸிக சிரோமணியிடம் சொல்லிற்று.

குயில் சொல்லுகிறது:-

"கர்த்தப ஸ்வாமி யென்பவன் பாம்புப் பெண்ணுடைய வஞ்சனையில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு மிகுந்த பழியுண்டாயிற்று. ஊரார் அவனை மடத்திலிருந்து துரத்தினார்கள். பிறகு பாம்புப் பெண்ணும் அவனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பின், அவ்விருவரும் உலக வாழ்க்கையிலே பலவகைத் துன்பங்களுக்கு இரையாகி முடிந்தனர்"