பக்கம் எண் :

த.கொ. செட்டி கத

இதைக் கேட்டு மானி அய்யன்-

"சரி; யோசிக்க வேண்டியதில்லை, நான் காரியத்தை முடித்துக் கொண்டு வருகிறேன்" என்றான். பிறகு அவன் மாணிக்கஞ் செட்டியினிடம் தன் செலவுகளுக்கு வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தான், தலையை மொட்டையடித்தான். காவி வேஷ்டியும் கட்டிக் கொண்டான். செட்டியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

பிற்பகல் வேளை, செட்டி ஏதோ பக்ஷணம் தின்று தாக சாந்தி செய்துகொண்டு வெற்றிலை சுவைக்கிறான். "நாராயணா" "நாராயணா" என்ற உச்சாடணத்துடன் ஸந்நியாசி அவன் முன்னே போய் உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு ஸமாதியிலே ஆழ்ந்து விட்டான். பத்து நிமிஷம் கழிந்த பிறகு கண்ணைத் திறந்தான். அப்போது தட்டிக்கொண்டான் செட்டி அவன் காலிலே ஸாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமிகளுக்கு எவ்விடம்? அடியேன் சிறு குடிலுக்கு எழுந்தருளியதன் நோக்க மென்ன?" என்றான்.

ஸந்நியாசி சொல்லுகிறான்:-

"வீடு நமக்குத் திருவாலங்காடு. விமலர் தந்த ஓடு நமக்குண்டு. வற்றாத பாத்திரம்" என்றார் பட்டினத்தடிகள்.

"எல்லா வூரும் நம்முடைய வூர், எல்லா நாடும் நம்முடைய நாடு. இந்த உலகம் வெறும் நாம ரூபங்களைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த நாமரூபங்களெல்லாம் பொய். பூர்வாசிரமத்தில் மயிலாப்பூரிலே பிறந்து வளர்ந்தோம். குருகிருபையால் இந்த ஆசிரமம் கிடைத்தது.