இந்த ஊருக்கு வந்ததில், ஸாதுக்களிடத்திலே தங்களுக்கு மிகவும் அபிமானமென்று கேள்விப்பட்டோம். வெறுமே தங்களைப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தோம். தங்களால் நமக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமேயில்லை. நம்மால் தங்களுக்கு ஏதேனும் அனுகூலம் கிடைக்க வேண்டுமென்ற கருத்திருந்தால் தெரிவிக்கலாம்" என்றான்- செட்டி சிறிது நேரம் யோசித்த பிறகு:- "சாமிகளுக்கு ஆரூடம் வருமோ?" என்றான். ஸந்நியாசி புன்சிரிப்புடன்:- "ஏதோ சொற்பம் வரும்" என்றான். தட்டிக்கொண்டான் செட்டி சொல்லுகிறான்:- "நான் அவசரத்தைக் கருதி ஒரு காரியம் செய்தேன். கெட்ட காரியமென்று உறுதியாகச் சொல்ல முடியாது. கிளியை அடித்தால் பாவம், ஓநாயை அடித்தால் பாவமா? ஒருவாறு நான் செய்தது நல்ல காரியந்தான். அதிலிருந்து எனக்கேதேனும் தீங்கு வரக் கூடுமோ என்ற பயமுண்டாகிறது இந்த விஷயத்தில் பின்வரும் விளைவைச் சாமிகள் அரூடத்தினால் கண்டு சொல்ல வேண்டும்" என்று பணிவு காட்டினான். ஸந்நியாசி மறுபடி கண்ணை மூடிச் சில நிமிஷங்கள் வாயை முணுமுணுத்தான். பிறகு சொல்லுகிறான்:- "மாமாவுக்கு நஷ்டம் வருகிறது. த.கொ.வுக்கு லாபம் வருகிறது" என்றான். செட்டி இதைக் கேட்டு ஆச்சரியத்துடன் மதுரை மாணிக்கஞ் செட்டிக்கு நஷ்டமென்றும், தட்டிக்கொண்டான் செட்டிக்கு லாபமென்றும் ஆரூடம் சொல்வதாகத் தெரிந்து கொண்டு, இந்தச் சாமியாரை நான்றாகப் பரீக்ஷிக்க வேண்டுமென்ற கருத்துடன், "சாமிகளே, அவ்விடத்தில் உத்தரவு செய்வது எனக்கு நேரே அர்த்தமாகவில்லை. விளங்கச் சொல்லவேண்டும்" என்று கேட்டான். |