பக்கம் எண் :

த.கொ. செட்டி கத

அதற்கு ஸந்நியாசி:

"செட்டியாரே, ஆரூடம் நாம் சொல்வதில்லை. நமக்குப் பிரம்ம வித்தையொன்றுதான் தெரியும். மற்றதெல்லாம் வீண் வித்தை, நம்முடைய நாக்கில் இருந்து கொண்டு ஒரு யக்ஷிணி தேவதை இந்த ஆரூடம் சொல்லுகிறாள். அதன் குறிப்புப்பொருளை நாம் கவனிப்பதே கிடையாது. கவனித்தாலும், சில சமயங்களில் அர்த்தமாகும். சில சமயங்களில் அர்த்தமாகாது. கேட்பவர் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அர்த்தம் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்" என்றான்.

செட்டி தனது ரகஸ்யத்தைச் சாமியார்கூடத் தெரிந்து கொள்ளாதபடி, அவ்வளவு நயமாகத் தனக்கு அனுகூலம் சொல்லிய யக்ஷிணி தெய்வத்தினிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவனாய் ஆனந்த பரவசனாய் விட்டான். சாமியாரிடத்திலும் அவனுக்குச் சொல்ல முடியாத மதிப்புண்டாயிற்று. ஒரு தட்டு நிறைய பலவிதமான பழங்களும், காய்ச்சின பாலும் கொண்டு வரும்படி செய்து சாமியார் முன்னாலே வைத்து, "திருவமுது செய்தருள வேண்டும்" என்றான்.

ஸந்நியாஸி ஒரு வாழைப்பழத்திலே பாதியைத் தின்று, அரைக் கிண்ணம் பாலைக் குடித்துவிட்டு 'போதும்' என்று சொல்லிவிட்டான்.

அப்போது செட்டி ஸந்நியாசியை நோக்கி, "ஏதேனும், மடத்துக் கைங்கரியமானாலும், கோயில் திருப்பணியானாலும், சுவாமிகள் என்ன கட்டளையிட்டபோதிலும் என்னாலியன்ற பொருளுதவி செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.

சாமியார் தலையை அசைத்து, - "பிரம்மமே ஸத்தியம், ஜகத் மித்யை; மடமேது, கோயிலேது? பரமாத்மா கட்டை விரலளவாக ஹிருதயத்திலுள்ள குகையில் விளங்குகிறான், எல்லாம் நமக்குள்ளேதானிருக்கிறது. உம்மால் நமக்கு எவ்விதமான பொருளுதவியும் வேண்டியதில்லை" என்றான்.