இப்படி இருக்கையில், ஒரு வேலையாள் வந்து, "கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர் வந்திருக்கிறார். எஜமானைப் பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறார்" என்று செட்டியிடம் தெரிவித்தான். செட்டி சாமியாரை நோக்கி "வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். சந்நியாசி - "ஆக்ஷேபமென்ன?" என்றான். "வரச் சொல்லு" என்று செட்டி உத்தரவு கொடுத்தான். தட்டிக்கொண்டான் செட்டியும், ஆரூட ஸ்வாமிகளும் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயரும், மூன்று பேருமாக சம்பாஷிக்கலானார்கள்:- க.கா.க. - ஸ்வாமிகளுக்கு எவ்விடம்? ஆ.ஸ். - சந்நியாசிக்கு இடமேது? வீடேது? த.கொ.செ. - ஞானத்தினுடைய கடல், உபாஸனையே திருவடிவம், பக்திக் கோயில். ஸ்வாமிகளுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றுந் தெரியும். க.கா.க. - இலக்கணத்தின் கருத்தே அது. ஆ.ஸ். - உண்மையான துறவி ஒருநாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்கலாகாது. ஒரு முறை புசித்த வீட்டில் மறுமுறை புசிக்கலாகாது. பிரம்மம் ஒருமை. உலகம் பன்மை. த.கொ.செ. - பிரம்மம் ஒருமை, பிரம்மங்கள் பன்மை என்று உத்தரவாக வேணும். |