சாமியாருக்குப் பகல், இரவு போஜனம் பின்வருமாறு செட்டியும் பரிசாரகனுமாகப் பேசித் தீர்மானம் செய்து கொண்டார்கள்:- காலையில் மூன்றாம் நாழிகை - வெண்பொங்கல், தயிர்வடை, நெய்த் தோசை, பால். நடுப்பகல் - பஞ்சபஹ்ய பரமானத்துடன் அன்னம். பிற்பகல் - பழங்கள், பால். இரவு - நடுப்பகல் போல்; ஆனால் அன்னத்திற்குப் பதில் தோசை. இரண்டு நாள் கழிந்தவுடன் செட்டி இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். பிறகு இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். இப்படியாகப் பல தினங்களாயின. மதுரை மாணிக்கஞ் செட்டி "தட்டிக்கொண்டானிடம் மானி அய்யனை அனுப்பினோமே, ஓரோலைகூட வரவில்லையே? என்ன செய்கிறானோ தெரியவில்லையே" என்று யோசிக்கலானான். ஒரு நாள் மாலையில் தட்டிக்கொண்டான் செட்டியும் ஆருட ஸ்வாமியும் பேசிக் கொள்ளுகிறார்கள். செட்டி கேட்டான்: "ஆனைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வருமென்ற பழமொழியின் அர்த்தமென்ன?" ஆரூடஸ்வாமி சொல்லுகிறான்:- கஜவதனம்; ஆனை யென்பது விநாயகரைக் குறித்தாலும் குறிக்கலாம். அப்போது பூனைக்கிடமில்லை. பூனை இல்லையா? எலி வாகனமோ. இல்லையோ? அந்த எலிக்கு விரோதம் ஒரு பூனை இராதோ? அந்தப் பிள்ளையார் வீட்டு எலிக்கு ஒரு காலம் வந்தால் மேற்படி பூனைக்கு ஒரு காலம் வராதோ? இப்படியும் ஒரு அர்த்தம் சொல்லலாம். |