வேதாந்தமாகவும் பொருள் சொல்லலாம்; 'ஆனையாவது மதம். பூனையாவது விவேகம். மதத்தின் காலம் போனால் விவேகத்தின் பெருமை விளங்கும்' என்பது ஞானார்த்தம். இங்ஙனம் ஆரூடஸ்வாமி சொல்வதைக் கேட்டுத் தட்டிக் கொண்டான் செட்டி கேட்டான்:- "மதமென்றால் சைவம், வைஷ்ணவம், அப்படியா?" உடனே ஆரூடஸ்வாமி: "ஹூம்! ஹூம்! ஹூம்! அப்படியில்லை. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் என்ற ஆறும் உட்பகை. இதிலே, ஐந்தாவதாகிய மதம். அதாவது கர்வம். மதம் பிடித்துப் போய் நடக்கிற குணம். அது தீர்ந்த பிறகுதான் விவேக மேற்படும்." செட்டி கேட்டான்:- ஸ்வாமிகளே, என்னிடம் ஒரு கணக்குப் புஸ்தகம் இருக்கிறது. இருந்தது - நேற்று மாலையில் இருந்தது. இன்று பகல் பார்த்தேன்; காணவில்லை. அந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது. பகிரங்கமாகத் தேடக்கூடிய புஸ்தகமில்லை. இன்னார் எடுத்தனரென்று தெரியவில்லை. ஸ்வாமிதான் உத்தரவாக வேண்டும்" என்றான். அப்போது ஆரூடஸ்வாமி:- என்னை யக்ஷிணி திருவாரூருக்குக் கூப்பிடுகிறது. நான் இன்றிரவு புறப்பட்டுப்போய் நாளை மாலையில் அங்கிருந்து திரும்புவேன். வந்த பிறகு சொல்லுவேன்" என்றான். |